புதிய வரலாற்று முத்திரை பதிக்கும் மெஸ்ஸி.. உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை!
அர்ஜென்டினா சூப்பர் நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, வரவிருக்கும் உலகக் கோப்பையில் பங்கேற்பதன் மூலம் 6 தொடர்களில் விளையாடும் அபூர்வ சாதனையை எட்ட உள்ளார். ஏற்கனவே அதிக உலகக் கோப்பை போட்டிகளில் களம் கண்ட வீரர் என்ற பெருமை பெற்றுள்ள அவர், 2022 கத்தார் வெற்றிக்குப் பிறகும் மீண்டும் உலகக் கோப்பை மேடையில் வருவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச கால்பந்து ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளையடிக்கும் செய்தி இது. அர்ஜென்டினாவின் மந்திரப் புன்னகையாளன், காலசைவு வித்தகன், சாம்பியன் நாயகன் லியோனல் மெஸ்ஸி, கால்பந்து வரலாற்றின் உச்சக்கட்ட சாதனையை நோக்கித் தனது அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளார். வரவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் களம் காண்பதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றிலேயே அதிகபட்சமாக 6 தொடர்களில் பங்கேற்ற வீரர் என்ற இமாலய உலக சாதனையை மெஸ்ஸி சமன் செய்யவுள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு கத்தாரில் அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பையை முத்தமிடச் செய்து, ஒட்டுமொத்த உலகையும் தன்வசப்படுத்திய மெஸ்ஸி, இத்துடன் தனது உலகக் கோப்பை பயணம் முடிந்தது என்று கருதப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மகுடம் சூட தயாராகி வருகிறார். ஏற்கனவே உலகக் கோப்பையில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் மெஸ்ஸி. இந்த 6-ஆவது உலகக் கோப்பை பங்கேற்பு அவரது கால்பந்து வாழ்க்கையின் மிக உயரிய மைல்கல்லாக அமையப்போகிறது.

