INDW VS ENGW|டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி!
-செ.யுகேஷ்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
முதலாவது டி20 போட்டி இங்கிலாந்தில் உள்ள செம்ஸ்ஃபோர்டில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் சார்லி டீன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஸ்மிருதி மந்தனா ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆக, ஸ்மிருதி மந்தனாவுடன் களமிறங்கிய ஷெபாலி வெர்மாவும் வெறும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும் அதன் பின் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் யாஸ்திகா பாட்டியா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதன் மூலமாக இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்களை குவித்தது.
அதன் பின் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி தொடக்கத்திலேயே 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்த ஏமி ஜோன்ஸ் மற்றும் ஹீத்தர் நைட் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், அணியின் மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முன்னிலை பெற்றது.
நாளை நடக்கும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்று டி20 தொடரை கைப்பற்றும் என ரசிகர்களிடையே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

