2024 ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுகள் அறிவிப்பு!
நாட்டில் விளையாட்டுத்துறையின் உயரிய விருதான மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா விருது, சதுரங்க உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ், பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்ற மனு பாக்கர் உள்ளிட்ட நான்கு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த தொம்மராஜு குகேஷுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் சாம்பியன் பட்டம் வென்றார். சீன வீரர் டிங் லிரனுக்கு எதிரான 14 சுற்றுகளை கொண்ட போட்டித் தொடரில் இறுச்சுற்றில் வெற்றி கண்டார் குகேஷ். விஸ்வநாதன் ஆனந்த்- துக்கு பிறகு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார் குகேஷ்.
மேலும், 18 வயதே ஆன குகேஷ் அடங்கிய இந்திய அணி கடந்த வருடம் உலகக்கோப்பை போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்றது.
இதேபோல், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இரட்டை பதக்கங்களை வென்ற மனு பாக்கரும் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற அவர், கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கலத்தை கைப்பற்றினார்.ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் மனு.
இந்திய ஹாக்கி ஆடவர் அணி கேப்டன் ஹர்மன்பீரித் சிங் ஆகியோர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக் ஹாக்கிப்போட்டியில் அரைநூற்றாண்டுக்கு பின் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றதில் ஹர்மன்பிரித் முக்கிய பங்கு வகித்தார். ஹர்மன்பீரித் சிங் தலைமையிலான இந்திய அணி வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் ஆஸ்திரேலிய அணியை மூன்றுக்கு இரண்டு என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியது,இவர்களுடன் கடந்தாண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி தடகள வீரர் ப்ரவீன் குமாருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது. 2.08 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கமகனானார் ப்ரவீன் குமார். இவர்களுடன் 17 மாற்றுத்திறனாளி வீரர்-வீராங்கனைகள் உட்பட 32 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17 ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் இவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.