தென்னாப்பிரிக்கா போல நாமும் 'சோக்கர்ஸா'? இந்திய அணி சறுக்கியதும் சொதப்பியதும் எங்கே?

தென்னாப்பிரிக்கா போல நாமும் 'சோக்கர்ஸா'? இந்திய அணி சறுக்கியதும் சொதப்பியதும் எங்கே?
தென்னாப்பிரிக்கா போல நாமும் 'சோக்கர்ஸா'? இந்திய அணி சறுக்கியதும் சொதப்பியதும் எங்கே?

இந்தியாவுக்கு இந்த முறையும் உலகக் கோப்பை கைகூடவில்லை. இந்திய அணி எங்கே சொதப்பியது என்பதை விரிவாகப் பார்க்கலாம்..

நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் மிகவும் மோசமான தோல்வியை தழுவி வெளியேறியிருக்கின்றது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதையடுத்து பாகிஸ்தானும் இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. இந்தியாவுக்கு இந்த முறையும் உலகக் கோப்பை கைகூடவில்லை. மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. இந்திய அணி எங்கே சொதப்பியது?

மந்தமான ஓபனிங்

இந்த உலகக்கோப்பைத் தொடர் முழுவதுமே இந்திய அணியில் ஓப்பனிங் ஜோடியின் ஆட்டம் மிகவும் மந்தமாகவே இருந்தது. ரோகித் சர்மா - கேஎல் ராகுல் ஜோடி இந்த தொடரில் ஒருமுறை கூட 50 ரன்களை கூட சேர்த்ததில்லை. எல்லா போட்டியிலும் பவர்ப்ளேக்கு உள்ளாகவே இந்த பார்ட்னர்ஷிப் உடைந்திருக்கவும் செய்கிறது. இந்த பிரச்சனை அரையிறுதி வரை தொடர்ந்ததும் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.
அதிலும் கேஎல் ராகுல் இந்த முக்கிய போட்டியில் வெறும் 5 (5) ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றினார். கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக பெரிய ரன்களைக் குவிக்கும் ராகுல், வலுவான அணிகளுக்கு எதிராக தொடர்ந்து சொதப்பியுள்ளார். அதேபோல் ரோகித் சர்மாவின் ஆட்டமும் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. நடப்பு தொடரில் அவர் மொத்தமாக 109 பந்துகளை சந்தித்து 116 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்.

பலவீனமான பவுலிங்

இந்த தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பேரிழப்பாக அமைந்துவிட்டது. பும்ராவுக்குப் பதிலாக சேர்க்கப்பட்ட முகமது ஷமியின் பந்துவீச்சு பெரியளவில் எடுபடவில்லை. அடிலெய்டு ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்றாலும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வீசுவதற்கு இந்திய அணியில் யாரும் இல்லை. நேற்றைய போட்டியில் இந்திய பவுலர்களால் இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் ஒருவரை கூட வீழ்த்தவே முடியவில்லை. இதன்மூலம் இந்திய அணியின் பவுலிங் எந்தளவிற்கு பலவீனமாக இருக்கிறது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இளம் அணி எங்கே?

பெரிய தொடர்களில் இளம் வீரர்களை தேர்வு செய்யாமல் மூத்த வீரர்களையே அதிகம் சார்ந்து இருப்பது விமர்சனத்துக்குள்ளாகிறது. கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வயது 35; விராட் கோலிக்கு 34; தினேஷ் கார்த்திக்க்கு 37; அஸ்வினுக்கு 36; முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் இருவருக்கும் வயது 32. இவர்களில் விராட் கோலியை தவிர மற்றவர்கள் பெரியளவில் சோபிக்கவில்லை. மேலும் இந்திய அணியில் மூத்த வீரர்கள் சொதப்பி வந்தாலும் கூட கேப்டன் ரோகித் சர்மா அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு தந்து வருகிறார். வரும் காலங்களிலாவது இளம் மற்றும் அனுபவம் கலந்த பிளேயிங் லெவனை உருவாக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

சாஹல் விளையாடாதது தவறு

இந்திய அணியின் ஒரேயொரு ரிஸ்ட் ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹல் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இந்த உலகக் கோப்பையில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சிறப்பாக ஆடியிருக்கிறார்கள். எனவே அஷ்வினுக்கு பதில் சாஹலை ஆடவைக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் சொல்லிக்கொண்டே இருந்தனர். ஆனால் அது அணி நிர்வாகம் காதில் விழவில்லை. குறிப்பாக அரையிறுதியில் கூட சாஹல் சேர்க்கப்படாதது அணி நிர்வாகம் செய்த மிகப்பெரிய தவறு.

அஷ்வின் பேட்டிங்கில் கைகொடுக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் ஓபனிங், மிடில் ஆர்டர் ஒழுங்காக பேட்டிங் ஆடினால் அஷ்வினின் பேட்டிங் பங்களிப்பு எதற்கு எனக் கேள்வி எழுகிறது. அதேபோல் ஜடேஜாவிற்கு மாற்று வீரராக ஆடிய அக்ஸர் படேலும் தனது பணியை சரியாக செய்யவில்லை.

இதையும் படிக்கலாமே: கெத்துகாட்டி ஏமாற்றிய இந்தியா - நியூ,; மீண்டுவந்து வெற்றிக்கொடி நாட்டிய பாக்,- இங்கிலாந்து

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com