
11 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்தாட்ட தொடர் இன்று கோவாவில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கொல்கத்தா - கேரளா அணிகள் மோதுகின்றன.
இந்திய வீரர்களுடன் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் இணைந்து பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவான இதில் முதல் 3 ஆண்டுகளில் 8 அணிகளும், அதன் பிறகு 10 அணிகளும் கலந்து கொண்டன. முதலாவது சீசனில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015 ஆம் ஆண்டில் சென்னையின் எப்.சி. அணியும், 2016- ஆம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தாவும், 2017-ஆம் ஆண்டில் சென்னையின் எப்.சி.யும், 2018-ஆம் ஆண்டில் பெங்களூரு எப்.சி.யும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.
கடந்த சீசனில் நடந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 3-வது முறையாக பட்டத்தை சொந்தமாக்கியது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான 7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் இன்று தொடங்கி மார்ச் மாதம் வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான போட்டிகள் அனைத்தும் ஒரே மாநிலத்தில் அதாவது கோவாவில் ரசிகர்கள் இன்றி அரங்கேறுகிறது. அங்குள்ள பதோர்டா ஜவகர்லால் நேரு ஸ்டேடியம், பாம்போலிம் ஜி.எம்.சி. தடகள ஸ்டேடியம், வாஸ்கோ திலக் ஸ்டேடியம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி போட்டி நடைபெறுகிறது.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டி தொடருக்காக ஒவ்வொரு அணிகளும், புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து இருப்பதுடன், கடந்த மாதமே கோவா சென்று கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்துக்கு மத்தியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா பரவல் தொடங்கிய 8 மாதத்துக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் முதலாவது பெரிய போட்டி இதுவாகும். இந்த தொடரில் மொத்தம் 115 ஆட்டங்கள் இடம் பெறுகிறது. இது கடந்த ஆண்டை விட 20 ஆட்டங்கள் அதிகமாகும்.
ஜனவரி 11 ஆம் தேதி வரையிலான லீக் ஆட்ட அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க லீக் ஆட்டத்தில் கேரளா-கொல்கத்தா அணிகள் இதுவரை 3 முறை மோதி இருக்கின்றன. அதில் ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. கடைசி 2 சீசனிலும் கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி வாகை சூடி இருக்கிறது. இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.