ஃபிட்னெஸ் தேர்வில் தேர்ச்சி ஆகாத ராகுல் தெவாட்டியா
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதற்கட்டமாக நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.
அதையடுத்து கோலி தலைமையிலான டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்களின் விவரத்தை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ராகுல் தெவாட்டியாவும் முதல்முறையாக இந்திய அணியில் விளையாட தேர்வாகியிருந்தார்.
இந்த சூழலில் அவர் ஃபிட்னெஸ் தேர்வில் தேர்ச்சி ஆகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் விளையாட வேண்டுமென்றால் இந்த ஃபிட்னெஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் முடியும் என பிசிசிஐ சில தரத்தை வைத்துள்ளது. அதாவது யோ-யோ டெஸ்டில் 17:1 என்ற ஸ்கோரோ அல்லது 2 கிலோ மீட்டர் தூரத்தை 8.3 நிமிடத்திற்குள்ளாகவோ வீரர்கள் கடந்தால் தான் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும்.
இப்போது ராகுல் தெவாட்டியா அதில்தான் தேர்ச்சி பெறவில்லை எனத் தெரிகிறது. இருந்தாலும் அவருக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்கப்படும் என பிசிசிஐ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.