சிக்ஸர்களாக விளாசி மிரட்டிய ஜடேஜா, ரிஷப் - இந்தியா 649 ரன் குவித்து டிக்ளேர்

சிக்ஸர்களாக விளாசி மிரட்டிய ஜடேஜா, ரிஷப் - இந்தியா 649 ரன் குவித்து டிக்ளேர்

சிக்ஸர்களாக விளாசி மிரட்டிய ஜடேஜா, ரிஷப் - இந்தியா 649 ரன் குவித்து டிக்ளேர்
Published on

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. இந்திய அணியில் பிரித்வி ஷா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசினர். அதேபோல், புஜாரா, ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இளம் வீரரும், அறிமுக வீரருமான பிருத்வி ஷா சதம் அடித்து சாதனை படைத்தார். பின்னர் 134 (154) அவர் ஆட்டமிழந்தார். புஜாரா 86 (130) எடுத்தார். நேற்றைய நேர ஆட்ட முடிவில் கோலி களத்தில் இருக்க, இந்திய 364 ரன்கள் குவித்திருந்தது. 

இந்நிலையில் இன்றைய ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய அணி வேகமாக ரன் குவிக்க தொடங்கியது. விராட் கோலி சற்றே நிதானமாக விளையாட, ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிக்ஸர்களாக விளாசிய அவர், 84 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் நிலைத்து விளையாடி கோலி சதம் அடித்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இது விராத் கோலியின் 24வது சதமாகும். உணவு இடைவேளையின் போது  இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் எடுத்துள்ளது. விரைவில் இந்தியா டிக்ளேர் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், பின்னர் வந்த ஜடேஜா மேற்கிந்திய தீவுகள் பந்து வீச்சை ஒருகை பார்த்துவிட்டார். விராட் கோலி, அஸ்வின், குல்தீப், உமேஷ் என சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்தாலும், ஜடேஜா நிலைத்து நின்று விளையாடினார். இடையிடையே சிக்ஸர் மழையும் பொழிந்தார். அதனால், இந்திய அணியின் ரன் மளமளவென எகிறியது. 132 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் ஜடேஜா சதம் அடிக்க ஆட்டத்தை டிக்ளேர் செய்தார் விராட் கோலி.

இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 649 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் பிஷூ 4 விக்கெட்கள் சாய்த்தார். பின்னர், தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி 7 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்களை இழந்துள்ளது. முகமது சமி இரண்டு விக்கெட்களை சாய்த்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com