மீண்டு எழுமா பேயர்ன் மூனிச்; ’சாம்பியன்ஸ் லீக்’கை வென்று கொடுப்பாரா பயிற்சியாளர் தாமஸ் டுகெல்?

ஜெர்மனியின் முதல் டிவிஷன் கால்பந்து தொடரான புண்டஸ்லிகா (Bundesliga) இந்த வாரம் தொடங்கவிருக்கிறது.
புண்டஸ்லிகா -ஜெர்மனி
புண்டஸ்லிகா -ஜெர்மனிTwitter

இந்த வாரம் தொடங்குகிறது ஜெர்மனியின் முதல் டிவிஷன் கால்பந்து தொடரான புண்டஸ்லிகா (Bundesliga). கடந்த சீசனின் கடைசிப் போட்டியில் போராடி சாம்பியன் ஆன பேயர்ன் மூனிச், இம்முறை சரிவிலிருந்து மீண்டு வர நினைக்கும். எப்படியும் லீகை வென்றுவிடும் என்றாலும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் முன்பைப் போல் சிறப்பாக விளையாடுவதே அந்த அணியின் இலக்காக இருக்கும்.

2022-23 கால்பந்து சீசன் பேயர்ன் மூனிச் அணிக்கு சிறப்பாகச் செல்லவில்லை. பயிற்சியாளர் ஜூலியன் நகில்ஸ்மேனுக்கும் பேயர்ன் நிர்வாகத்துக்குமான உறவு கொஞ்சம் கொஞ்சம் தேயத் தொடங்கியது. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த கிளப் நிர்வாகம் நகில்ஸ்மேனை பதவியிலிருந்து நீக்கியது. அதைத் தொடர்ந்து செல்சீ, பொருஷியா டார்ட்மண்ட், பிஎஸ்ஜி போன்ற அணிகளுக்கு பயிற்சியாளர்களாக இருந்த தாமஸ் டுகெல் பேயர்ன் மூனிச் அணியின் மேனேஜராக பதவியேற்றார்.

புண்டஸ்லிகா -ஜெர்மனி
பிரீமியர் லீக்: ஹாலண்ட், ஈசாக், ??? - முதல் வாரத்தின் ஐந்து ஹீரோக்கள் யார்?
தாமஸ் டுகெல்
தாமஸ் டுகெல்Facebook

இந்த பிரச்னை ஒருபக்கமென்றால் வீரர்கள் மத்தியிலும் சூழ்நிலை சரியாக இருக்கவில்லை. சாடியோ மனே, லெராய் சனே இருவரும் மோதிக்கொண்டார்கள். கடந்த சீசன் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அணியில் இணைந்த மானே கிளப்புக்குள் செட்டில் ஆகவே இல்லை. இந்த சீசன் தொடங்குவதற்கு முன் அவர் அணியிலிருந்து வெளியேறி சவுதி அரேபியாவுக்கு சென்றுவிட்டார். இப்போதும் கூட பெஞ்சமின் பவார்ட் அணியிலிருந்து வெளியேற நினைக்கிறார்.

இவற்றுக்கு மத்தியில் அந்த அணியின் செயல்பாடு அவ்வளவு சிறப்பாக இல்லை. டுகெல் அணிக்குள் வந்து செட்டில் ஆக தாமதம் ஆனது. அந்தக் காலகட்டத்தில் நிறைய புள்ளிகளை இழந்தது பேயர்ன். ஒருகட்டத்தில் லீக் பட்டத்தை இழந்துவிடும் என்று கருதப்பட்டது. இருந்தாலும் பொருஷியா டார்ட்மண்டும் அவர்கள் பங்குக்கு கொஞ்சம் புள்ளிகளை இழக்க, ஒருவழியாக சீசனின் கடைசிப் போட்டியில் முதலிடத்தை உறுதி செய்தது அந்த அணி.

இப்படிப்பட்ட நிலையில் தான் அந்த அணியை மீண்டும் பழையபடி மாற்றவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் பயிற்சியாளர் தாமஸ் டுகெல். அவருக்கும் கடந்த சீசன் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. கடந்த சீசனை செல்சீ அணியோடு தொடங்கியவர், புதிய நிர்வாகத்தோடு ஒத்துப்போகாததால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

புண்டஸ்லிகாவில் அடுத்த இன்னிங்ஸை தொடங்கியவருக்கு ஆரம்பம் சற்று சிரமமாகவே இருந்தது. சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதியில் மான்செஸ்டர் சிட்டி அணியிடம் பேயர்ன் தோற்றது. இருந்தாலும் லீகில் சொதப்பியது தான் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இந்த சீசனாவது சரியாகத் தொடங்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த வாரம் நடந்த சூப்பர் கப் போட்டியில் ஆர்பி லெப்ஸிங் அணியிடம் 0-3 என படுதோல்வி அடைந்தது பேயர்ன். அதனால் இப்போது அவர் மீதான நெருக்கடியும் அதிகரித்திருக்கிறது.

 பேயர்ன் மூனிச் அணி
பேயர்ன் மூனிச் அணிFacebook

இந்த சீசன் பேயர்ன் மூனிச் அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. டிரான்ஸ்ஃபர் விண்டோவில் பெரும் செலவு செய்திருக்கிறது அந்த அணி. முக்கியமாக ஒரு சரியான நம்பர் 9 வீரரை வாங்கியிருக்கிறார்கள். ராபர்ட் லெவண்டோஸ்கி அந்த அணியிலிருந்து வெளியேறிய பின் ஒரு ஸ்டிரைக்கர் இல்லாமல் தான் அவர்கள் சீசனை எதிர்கொண்டனர். ஃபால்ஸ் 9 திட்டம் அவர்களுக்கு ஒத்துவரவில்லை. இந்நிலையில் பெரும் போராட்டத்துக்குப் பிறகு இந்த சனிக்கிழமை ஹேரி கேனை ஒப்பந்தம் செய்துவிட்டது பேயர்ன் மூனிச். அவருக்கு சுமார் 100 மில்லியன் பவுண்டுகள் செலவளித்த அந்த அணி, அதில் பாதியை செலவு செய்து நெபோலி டிஃபண்டர் கிம் மின்-ஜேவை வாங்கியிருக்கிறது. லூகாஸ் ஹெர்னாண்டஸ் வெளியேறியிருப்பதால் கிம்மை வைத்து அந்த இடத்தை நிரப்பியிருக்கிறது அந்த அணி. லூகாஸ் லெஃப் பேக் ரோலிலும் விளையாடுபவர் என்பதால், அந்த இடத்தை நிரப்ப ரஃபேல் குரேரோ ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும், வெகுகாலம் எதிர்பார்த்திருந்த கொன்ராட் லெய்மரையும் ஃப்ரீ டிரான்ஸ்ஃபர் மூலம் இணைத்திருக்கிறது பேயர்ன்.

இருந்தாலும் அந்த அணிக்கு மிகப் பெரிய பிரச்சனை கேப்டன் மானுவேல் நூயர் ரூபத்தில் தான் காத்திருக்கிறது. சமீப காலமாக அவர் தொடர்ந்து காயமடைந்து வருகிறது. சொல்லப்போனால் விளையாடும்போது அவர் பழைய ஃபார்மில் இல்லை. அதனால் அந்த இடம் தான் பேயர்ன் மூனிச்சுக்கு பிரச்னை தருவதாக இருக்கும். யான் சாம்மர் இன்டர் மிலன் அணியில் இணைந்துவிட்டதால், பேயர்ன் மூனிச் ஒரு கோல் கீப்பரை தேடிக்கொண்டே இருக்கிறது. அந்த இடத்தை அவர்கள் சரியாக நிரப்பவில்லை என்றால் அது அவர்களுக்குப் பின்னடைவாக அமையலாம்.

கேப்டன் மானுவேல் நூயர்
கேப்டன் மானுவேல் நூயர்Face book

எது எப்படியோ கேனின் வருகை நிச்சயம் இந்த அணியை பன்மடங்கு பலப்படுத்தியிருக்கிறது. அதனால் புண்டஸ்லிகாவை நிச்சயம் அந்த அணி தொடர்ந்து 11வது முறையாக வெல்லவேண்டும். ஆனால் சாம்பியன்ஸ் லீக் செயல்பாடு தான் அந்த அணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கான ரிவ்யூவாக அமையும். ஒவ்வொரு பொசிஷனும் பலமாகவே இருக்கும் நிலையில் நிச்சயம் அந்த அணி அரையிறுதி வரையாவது முன்னேறியாகவேண்டும்.

அனைத்தையும் விட, ஹேரி கேனுக்காகவாவது அவர்கள் கோப்பைகள் வெல்லவேண்டும் என்று கால்பந்து வட்டாரத்தில் பிராத்தனைகளும் நடந்துகொண்டிருக்கிறது!!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com