2023-24 பிரீமியர் லீக்
2023-24 பிரீமியர் லீக் Facebook

பிரீமியர் லீக்: ஹாலண்ட், ஈசாக், ??? - முதல் வாரத்தின் ஐந்து ஹீரோக்கள் யார்?

2023-24 பிரீமியர் லீக் சீசன் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. முதல் வாரத்தில் சிறப்பாக செயல்பட்ட டாப் 5 வீரர்கள் யார்?

2023-24 பிரீமியர் லீக் சீசனின் முதல் போட்டியில் பர்ன்லியை 3-0 என வீழ்த்தி சீசனைத் தொடங்கி வைத்தது நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி. எதிர்பார்த்ததைப் போலவே ஆர்செனல், மான்செஸ்டர் யுனைடட் அணிகள் வெற்றியோடு தொடங்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செல்சீ vs லிவர்பூல் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. பெரிய அதிர்ச்சிகள் இல்லாத முதல் வாரத்தில் சிறப்பாக செயல்பட்ட டாப் 5 வீரர்கள் யார்?

1. எர்லிங் ஹாலண்ட் (மான்செஸ்டர் சிட்டி) - 2 கோல்கள் Vs பர்ன்லி!

2022-23 பிரீமியர் லீக் சீசனில் எங்கு விட்டாரோ அங்கிருந்தே இந்த சீசனைத் தொடங்கியிருக்கிறார் எர்லிங் ஹாலண்ட். புதிய சீச்ன தொடங்கி நான்காவது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்தது அந்த கோல் மெஷின்.

எர்லிங் ஹாலண்ட்
எர்லிங் ஹாலண்ட்Twitter

அடுத்த சில நிமிடங்களிலேயே ஒரு அற்புதமான 'ஒன் டச்' கோலை அடித்து கணக்கை இரண்டாக்கினார் ஹாலண்ட். முதல் பாதி முடிந்து வெளியேறும்போது, அவரது செயல்பாட்டில் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார் மான்செஸ்டர் சிட்டி பயிற்சியாளர் பெப் கார்டியோலா. சொல்லப்போனால் ஹாலண்ட் எதிரணியின் பாக்ஸில் அதிக பந்துகளை சந்திக்கவில்லை. இருந்தாலும் கிடைத்த வாய்ப்புகளை கோலாக்குவதில் தானே ஸ்டிரைக்கர்களின் திறன் இருக்கிறது. அதை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் ஹாலண்ட். இந்த சீசனும் கோல் வேட்டை காத்திருக்கிறது.

2. அலெக்சாண்டர் ஈசாக் (நியூகாசில் யுனைடட்) - 2 கோல்கள் vs ஆஸ்டன் விலா

ஆஸ்டன் விலா அணிக்கு எதிராக 5-1 என வெற்றி பெற்று கடந்த சீசனின் ஃபார்மை தொடர்ந்திருக்கிறது நியூகாசில் யுனைடட். இந்த மிகப் பெரிய வெற்றிக்கு முக்கியக் காரணமாக விளங்கியிருக்கிறார் ஈசாக். கடந்த சீசனில் வில்சனையும் இவரையும் பயிற்சியாளர் எட்டி ஹோவ் ரொடேட் செய்துகொண்டே இருந்தார்.

அலெக்சாண்டர் ஈசாக்
அலெக்சாண்டர் ஈசாக்Twitter

இம்முறையும் அதுவே நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் தன் இடத்தை நிலைநிறுத்திக் கொள்ளக்கூடிய செயல்பாட்டை முதல் ஆட்டத்திலேயே காட்டியிருக்கிறார் ஈசாக். பிரஸ் செய்து பந்தை மீட்பது, பந்தை நன்றாக ஹோல்ட் செய்வது, கிடைக்கும் சிறிய வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வது என ஒரு பக்காவான நம்பர் 9 ஆக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார் அவர். மாற்று வீரராக வந்த வில்சனும் கோலடித்திருக்கும் நிலையில், மறுபடியும் ரொடேஷன் தலைவலி இருக்கலாம்!

3. ஆண்ட்ரே ஒனானா (மான்செஸ்டர் யுனைடட்) - கிளீன் ஷீட் vs வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ்

டேவிட் டி கேவின் மிகப் பெரிய இடத்தை மிக அற்புதமாக நிரப்பியிருக்கிறார் ஆண்ட்ரே ஒனானா. வோல்வர்ஹாம்ப்டன் அணிக்கெதிரான அவரது அறிமுக போட்டி எளிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வோல்வ்ஸ் அட்டாக்கர்களோ ஆச்சர்யம் தரும் வகையில் செயல்பட்டு யுனைடர் பெனால்டி ஏரியாவை தொடர்ந்து முற்றுகையிட்டுக்கொண்டே இருந்தனர்.

ஆண்ட்ரே ஒனானா
ஆண்ட்ரே ஒனானாFacebook

யுனைடட் டிஃபன்ஸும் சொதப்பியதால் நிச்சயம் வோல்வ்ஸ் கோலடித்து வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரணாக நின்று கோல் விடாமல் தடுத்தார் ஒனானா. 90 நிமிடங்களில் 6 சேவ்கள் செய்து தன் கிளீன் ஷீட்டையும் பாதுகாத்துக்கொண்டார். தன் அறிமுக போட்டியிலேயே யுனைடடுக்கு 3 புள்ளிகள் பெற்றுக்கொடுத்திருக்கிறார் ஒனானா!

4. ஜேம்ஸ் மேடிசன் (டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ்) - 2 அசிஸ்ட்கள் vs பிரென்ட்ஃபோர்ட்

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது பெற்றிருக்கிறார் ஜேம்ஸ் மேடிசன். அந்த அணி அடித்த 2 கோல்களுமே இவர் அசிஸ்ட் செய்தது தான். ஃப்ரீ கிக் மூலம் முதல் கோலுக்கு அசிஸ்ட் செய்த மேடிசன், அற்புதமாக பந்தை ஹோல்ட் செய்து இரண்டாவது கோலுக்கு அசிஸ்ட் செய்தார்.

ஜேம்ஸ் மேடிசன்
ஜேம்ஸ் மேடிசன்Twitter

ஹேரி கேன் இல்லாத அந்த அணிக்கு இவரது கிரியேடிவிட்டி ஓரளவு ஆறுதல் கொடுப்பதாக இருக்கிறது. புதிய பயிற்சியாளரின் கீழ் இப்போதுதான் அந்த அணி செட்டில் ஆகிக்கொண்டிருக்கிறது. இனி வரும் வாரங்களில் மேடிசனின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும்

2023-24 பிரீமியர் லீக்
Tottenham Hotspur | இவுக அந்த ஊரு ஈ சாலா கப் நம்தே..!

5. என்சோ ஃபெர்னாண்டஸ் (செல்சீ) - 2 வாய்ப்புகள் vs லிவர்பூல்

பெரும் தொகை கொடுத்து ஏன் செல்சீ தன்னை வாங்கியது என்பதை லிவர்பூலுக்கு எதிரான ஆட்டத்தில் ஓரளவு நிரூபித்திருக்கிறார் என்சோ. இளம் நடுகளத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர், இந்தப் போட்டியில் 2 வாய்ப்புகளை உருவாக்கினார். வலது பக்க நம்பர் 8 ரோலில் அவர் ஆடத் தொடங்கியதும் தொடர்ந்து பந்தை முன்னோக்கி செலுத்திக்கொண்டே இருந்தார்.

என்சோ ஃபெர்னாண்டஸ்
என்சோ ஃபெர்னாண்டஸ்Facebook

ரீஸ் ஜேம்ஸ், ரஹீம் ஸ்டெர்லிங் இருவரின் தாக்கமும் என்சோவால் அதிகரித்தது. சில்வெல் மட்டும் அந்த இரண்டாவது கோலை அடித்தபோது ஆஃப் சைடில் இல்லாமல் இருந்திருந்தால் என்சோவின் பெயரில் ஒரு அசிஸ்ட் சேர்ந்திருக்கும். கைசீடோ அணியில் இணைந்திருக்கும் நிலையில், இனிவரும் போட்டிகளில் என்சோவின் முழு விஸ்வரூபத்தையும் பார்க்க முடியும்.

இந்த வீரர்கள் மட்டுமல்லாமல் பெர்விஸ் எஸ்தூபின்யன், புகாயோ சகா, பென் சில்வெல், லூகாஸ் பகேடா போன்ற பல வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் பெற்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com