Leicester City | மீண்டும் பிரீமியர் லீகுக்குள் நுழையுமா முன்னாள் சாம்பியன்..?

லெஸ்டர் சிட்டி - இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து கிளப். 8 ஆண்டுகளுக்கு முன் அந்த அணி அவ்வளவு பிரபலமானது இல்லை.
Kasey McAteer
Kasey McAteerலெஸ்டர் சிட்டி

சில ஆண்டுகளுக்கு முன்பு பிரீமியர் லீக் சாம்பியனாக முடிசூடியிருந்த லெஸ்டர் சிட்டி கால்பந்து கிளப் கடந்த சீசன் ரிலகேட் ஆனது. இப்போது இரண்டாம் கட்ட லீகான சாம்பியன்ஷிப்பில் விளையாடிக்கொண்டிருக்கிறது அந்த அணி. இந்த சீசனுக்கு முன்பாக நட்சத்திர வீரர்கள் பலரும் அந்த அணியிலிருந்து வெளியேறினார்கள். இருந்தாலும் இந்த சாம்பியன்ஷிப் சீசனை சிறப்பாகத் தொடங்கியிருக்கும் அந்த அணி விளையாடியிருக்கும் 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. விளையாட்டு உலகில் மாபெரும் அதிசயத்தை நிகழ்த்திய அந்த அணி அதன்பிறகு பெரும் வீழ்ச்சியை சந்தித்துவிட்டது. இப்பொழுது இன்னொரு அசத்தல் சீசன் தேவைப்படுகிறது. அதை நோக்கி சரியாகப் பயணிக்கிறது அந்த அணி.

லெஸ்டர் சிட்டி - இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து கிளப். 8 ஆண்டுகளுக்கு முன் அந்த அணி அவ்வளவு பிரபலமானது இல்லை. பிரீமியர் லீகில் நிலைத்திருப்பதே அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் போராட்டமாகத்தான் இருக்கும். ஆனால் 2015-16 அது மாறத் தொடங்கியது. 2015-16 சீசனில் மாபெரும் சரித்திரம் படைத்தது அந்த அணி. அவர்கள் செய்த சாதனையைப் பற்றிப் புரிந்துகொள்ள அதற்கு முந்தைய சீசன் பற்றியும் பேசவேண்டும்.

2014-15 சீசன் லெஸ்டர் சிட்டி அணிக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. தொடர்ந்து போட்டிகளைத் தோற்றுக்கொண்டே இருந்தது அந்த அணி. மான்செஸ்டர் யுனைடட் அணியை 5-3 என அவர்கள் வீழ்த்தியது மட்டுமே அந்த சீசனின் பாசிடிவாகக் கருதப்பட்டது. ஒருகட்டத்தில் அந்த அணி நிச்சயம் ரிலகேட் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் கடைசி சில போட்டிகளில் எல்லாம் மாறின. கடைசி 9 போட்டிகளில் ஏழில் வென்று ரிலகேஷனைத் தவிர்த்தது லெஸ்டர் சிட்டி. அவர்களின் இறுதி கட்டப் போராட்டம் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

Stephy Mavididi
Stephy Mavididi லெஸ்டர் சிட்டி

2015-16 சீசன் தொடங்குவதற்கு முன் அந்த அணியின் பயிற்சியாளர் நைஜல் பியர்சன் நீக்கப்பட்டு, கிளாடியோ ரெனேரி பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார். அந்த முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. முந்தைய சீசனின் கடைசி கட்டத்தில் நைஜல் பியர்சன் சிறப்பாக செயல்பட்டதே அந்த அணி ரிலகேஷனைத் தவிர்க்க முக்கிய காரணமாக அமைந்தது. சீசனுக்கு முன்பான கருத்துக்கணிப்பில் அத்தனை வல்லுநர்களுமே லெஸ்டர் சிட்டி அந்த சீசன் ரிலகேட் ஆகிவிடும் என்று ஆருடம் சொன்னார்கள். பெட்டிங் தளங்களில் அந்த அணி வெற்றிக்கு 5000-1 என்ற மதிப்பு கணிக்கிடப்பட்டிருந்தது. அதாவது, லெஸ்டர் சிட்டி மீது ஒரு ரூபாய் கட்டினால், அந்த அணி லீகை வென்றால் அது 5000 ரூபாயாக திரும்ப வரும். அந்த அளவுக்குத்தான் அந்த அணியின் மீது நம்பிக்கை இருந்தது.

ஆனால் அந்த சீசன் தொடங்கியபோது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது ரெனேரியின் அணி. அட்டகாசமாக விளையாடிய லெஸ்டர் சிட்டி பெரிய அணிகளுக்கும் கூட அதிர்ச்சி கொடுக்கத் தொடங்கியது. மற்ற முன்னணி அணிகள் ஆங்காங்கே புள்ளிகளை இழக்க, 2015 கிறிஸ்துமஸ் சமயத்தில் பிரீமியர் லீகி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது அந்த அணி. சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பு அதே தருணத்தில் கடைசி இடத்தில் இருந்தது லெஸ்டர். இந்த மாற்றம் சீசன் முழுதும் நீடித்திருக்காது என்று பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால் அவர்களின் அட்டகாச ஆட்டம் தொடர்ந்தது. அந்த அணியின் ஜேமி வார்டி கோல் மழையாகப் பொழிந்தார். தொடர்ந்து 11 போட்டிகளில் கோலடித்த வார்டி, ஒரு பிரீமியர் லீக் சீசனில் தொடர்ந்து அதிக போட்டிகளில் கோலடித்தவர் என்ற ரூட் வேன் நிஸ்டல்ரூயின் சாதனையை முறியடித்தார். அவருக்குப் பக்கபலமாக வலது விங்கில் ரியாத் மாரெஸ் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டே இருந்தார். அவர்கள் இருவரையும் கட்டுப்படுத்துவது எந்த அணிக்குமே கடினமாக இருந்தது.

Kasey McAteer
Cricket World Cup | பான்டிங் ஆடிய மிரட்டல் ஆட்டம்... அந்த ஒற்றைக் கை சிக்ஸரை யாரால் மறக்க முடியும்!

அட்டாக்கில் இவர்கள் பட்டையைக் கிளப்பினால், நடுகளத்தில் என்கோலோ கான்டே பம்பரமாகச் சுற்றினார். அவரைத் தாண்டி எதிரணி அட்டாக்கர்கள் பந்தை கடத்திப் போவது இயலாத காரியமாய் இருந்தது. 'கான்டே ஆடுவது 2 வீரர்கள் களத்தில் இருப்பது போல் தெரிகிறது' என்று மற்ற அணியின் மேனேஜர்கள் பாராட்டும் வகையில் இருந்தது அவரது செயல்பாடு. ஒட்டுமொத்த அணியும் சிறப்பாய் ஆடியதால் அந்த அணிக்கு தொடர்ந்து நல்ல முடிவுகள் கிடைத்துக்கொண்டே இருந்தன. செல்சீ, டாட்டன்ஹாம், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி என அனைத்து பெரிய அணிகளையும் தோற்கடித்தது லெஸ்டர். ஆர்செனலுக்கு எதிராக மட்டுமே இரண்டு போட்டிகளிலும் தோற்றது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய அந்த அணி இறுதியில் பிரீமியர் லீக் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது. உலக விளையாட்டு வரலாற்றிலேயே இதுதான் மிகப் பெரிய அப்செட் வெற்றி என்று ஒட்டுமொத்த உலக ஊடகங்களும் இந்த வெற்றியைக் கொண்டாடின.

அதற்கடுத்த சீசனில் லெஸ்டர் சிட்டியால் அவ்வளவு சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. பிரீமியர் லீகில் 12வது இடமே பிடித்தது. இருந்தாலும் சாம்பியன்ஸ் லீகில் காலிறுதி வரை முன்னேறி அசத்தியது. இருந்தாலும், அந்த அணியின் செயல்பாடு நிர்வாகத்துக்குப் போதாததால், ரெனேரி பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு கிரெக் ஷேக்ஸ்பியர், கிளட் பால் என அடுத்த இரு சீசன்களில் பயிற்சியாளர்கள் மாறினார்கள். ஓரளவு மிட் டேபிள் அணியாக தங்களை நிலைநிறுதிக்கொண்டது லெஸ்டர். பிரெண்டன் ரோஜர்ஸ் பயிற்சியாளராகப் பதவியேற்றபின் அவர்களின் செயல்பாடு மேலும் மேம்படத் தொடங்கியது.

Kasey McAteer
ஹெட், அக்‌ஷர், சௌத்தி - உலகக் கோப்பைக்கு முன் அடுத்தடுத்து காயமடையும் வீரர்கள்!

2019-20 சீசனில் ஐந்தாவது இடம் பிடித்து, அடுத்த யூரோப்பா லீக் சீசனுக்கு தகுதி பெற்றது. 2020-21 பிரீமியர் லீக் சீசனிலும் ஐந்தாவது இடம் பிடித்ததோடு FA கப்பையும் வென்று அசத்தியது. இப்படி தங்களை இங்கிலாந்தின் முன்னணி கிளப்பாக நிலைநிறுத்திய நேரத்தில் தான் பிரச்னைகளும் உண்டாகத் தொடங்கின. கொரோனா தொற்று பல கிளப்களின் பொருளாதாரத்தை தலைகீழாகப் புரட்டிப்பட்ட, அதனால் லெஸ்டர் சிட்டியும் பெரும் சிக்கலுக்குள்ளானது. 2022-23 சீசனுக்கு முன்பாக அந்த அணியால் தங்களை பலப்படுத்திக்கொள்ள முடியவில்லை. கேப்டன் கேஸ்பர் ஸ்மைச்சல் வெளியேறினார். வெஸ்லி ஃபொஃபானா செல்சீக்கு சென்றார். அவர்களால் தரமான வீரர்களை வாங்க முடியவில்லை. பயிற்சியாளர் பிரெண்டன் ரோஜர்ஸும் சீசன் தொடங்குவதற்கு முன்பே இது கடினமான சீசன் என்று அவநம்பிக்கையுடனேயே பேசினார். அதற்கு ஏற்றதுபோலவே அந்த அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்கத் தொடங்கியது. ஒருகட்டத்தில் ரோஜர்ஸுக்குப் பதில் டீன் ஸ்மித்தை பயிற்சியாளராக்கியது லெஸ்டர். அவராலும் அணியைக் காப்பற்ற முடியவில்லை. இறுதியில் 18வது இடமே பிடித்து ரிலகேட் ஆனது அந்த அணி.

வழக்கமாகவே ஒரு அணி பிரீமியர் லீகிலிருந்து சாம்பியன்ஷிப்புக்கு ரிலகேட் ஆகும்போது அவர்களின் பண வரவு குறையும். அதனால், பல முன்னணி வீரர்களை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இப்போது லெஸ்டர் அப்படிப்பட்ட நிலையில் தான் உள்ளது. அணியின் ஸ்டார் பிளேயர் ஜேம்ஸ் மேடிசன் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு நகர்ந்துவிட்டார். ஜானி எவன்ஸ் ஒப்பந்த காலம் முடிவுக்கு வந்துவிட அவர் மான்செஸ்டர் யுனைடட் அணியில் இணைந்துவிட்டார். செக்லர் சொயுன்சு, ஆயோஸி பெரஸ் ஆகியோரின் ஒப்பந்தமும் முடிவுக்கு வர, அவர்களும் வெவ்வேறு திசைகளில் நகர்ந்துவிட்டனர். அடுத்ததாக இளம் விங்கர் ஹார்வி பார்ன்ஸும் நியூகேசில் யுனைடட் அணியில் இணைந்துவிட்டார்.

என்சோ மரேஸ்காவை பயிற்சியாளராக நியமித்திருக்கும் லெஸ்டர் சிட்டிக்கு இது மிகவும் கடினமான சீசனாகவே இருக்கும் என்று கருதப்பட்டது. இருந்தாலும் அணியில் நீடிக்கும் முன்னணி வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த, விளையாடிய 6 லீக் போட்டிகளில் 5 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது (1 தோல்வி) லெஸ்டர் சிட்டி. அந்த அணியின் நட்சத்திர நடுகள வீரர் கீனன் டியூஸ்பரி ஹால் 6 போட்டிகளில் 2 கோல்களும், 2 அசிஸ்களும் பதிவு செய்திருக்கிறார். மாண்ட்பெலியர் அணியிலிருந்து இந்த சீசன் லெஸ்டருக்கு வந்திருக்கும் ஸ்டெஃபி மாவ்டிடியும் 2 கோல்களும் 2 அசிஸ்ட்களும் பதிவு செய்திருக்கிறார். யானிக் வெஸ்டகார்ட், ஜேம்ஸ் ஜஸ்டின், ரிகார்டோ பெரீரா என தரமான டிஃபண்டர்கள் இன்னும் நீடிப்பது அந்த அணிக்கு பெரும் பலமாக இருக்கிறது. எப்படியோ இந்த சீசனை சிறப்பாகத் தொடங்கியிருக்கும் லெஸ்டர் சிட்டி, அதை கடைசி வரை தொடர்ந்து மீண்டும் பிரீமியர் லீகுக்கு புரமோஷன் அடைய முற்படும். ஒரு பிரீமியர் லீக் சாம்பியன் அந்த லீகிலேயே விளையாடவேண்டும் என்பதுதான் கால்பந்து ரசிகர்களின் ஆசையும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com