இந்திய கால்பந்து வரலாற்றில் புதிய அத்தியாயம்! இந்திய அணியில் சேர்ந்த வெளிநாட்டு கிளப் வீரர்கள்!
இந்திய கால்பந்து வரலாற்றில் புதிய அத்தியாயம், வெளிநாட்டு கிளப்புகளில் விளையாடிய அப்நீத் பார்தி, ரியான் வில்லியம்ஸ் ஆகியோர் முதன்முறையாக தேசிய அணியில் இணைந்துள்ளனர். இது இந்திய கால்பந்துக்கு சர்வதேச பரிமாணத்தை வழங்கும் முக்கிய முன்னேற்றமாகும்.
27 வயதாகும் தடுப்பாட்டக்காரரான அப்நீத் பார்தி நேபாளத்தில் பிறந்தவர். தனது 13 வயதிலேயே சிங்கப்பூரில் தொழில்முறை ஒப்பந்தம் செய்து கொண்டார். போலந்து முதல் டிவிஷன், போர்ச்சுகல், அர்ஜென்டினாவின் கிளப் என பல கிளப்புகளுக்காக விளையாடிருக்கிறார் பார்தி.
மிக முக்கியமாக, 2018-இ ல் இத்தாலியின் 'Calcio Mercato' என்ற பத்திரிகை இவரை ஆசியாவின் சிறந்த U-21 வீரர்களில் ஒருவராகப் பட்டியலிட்டது. இந்திய தூதரகம் வாயிலாக இவரது திறமை கவனிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தேசிய பயிற்சி முகாமில் இணைகிறார் பார்தி.
31 வயதான ரியான் வில்லியம்ஸ் ஒரு மின்னல் வேக விங்கர் ஆட்டக்காரர். இவருக்குப் பின்னால் ஒரு உணர்ச்சிகரமான கதை உள்ளது. ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் என்றாலும், இவரது தாயார் மும்பையைச் சேர்ந்த ஆங்கிலோ-இந்திய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாத்தா 1950-களில் பம்பாய் அணிக்காகச் சந்தோஷ் கோப்பையில் ஆடியவர். இங்கிலாந்தின் புகழ்பெற்ற போர்ட்ஸ்மவுத், ஃபுல்ஹாம், ரோதர்ஹாம் யுனைடெட் போன்ற கிளப்களுக்காக விளையாடியிருக்கிறார் ரியான்.
ஆஸ்திரேலியக் குடியுரிமையை விட்டுக்கொடுத்து பெங்களூரு கிளப்பில் முதலில் இணைந்தார். நட்சத்திர வீரர் சுனில் சேத்ரியின் பரிந்துரையால், வெளிநாட்டு வாழ் இந்திய வீரர்களுக்கான கொள்கை தளர்த்தப்பட்டு, இந்திய தேசிய அணியிலும் இடம்பிடித்து விட்டார்.
வெளிநாட்டு கிளப் வீரர்களின் இருவரின் வருகை, இந்திய கால்பந்தை ஒரு சர்வதேச பரிமாணத்தை நோக்கி பயணிக்கச் செய்கிறது.

