FIFA| மெக்சிகோ வரலாற்று வெற்றி.. கால்பந்து கொண்டாட்டத்தில் 3 பேர் பலி!
கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா இணைந்து நடத்தும் FIFA உலகக்கோப்பையில், மெக்ஸிகோ அணி இதுவரை ஒரு கோலும் விடாமல் வலுவாக விளையாடி, ஈகுவடாரை 2-0 என வீழ்த்தி வரலாற்று ரவுண்ட் 16-க்கு முன்னேறியது. இந்த வெற்றியை கொண்டாட மெக்ஸிகோ சிட்டியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 19 வயது இளம்பெண் உள்பட மூவர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர், ஜூன் 11ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், லீக் சுற்றுகள் முடிவில் 16 அணிகள் வெளியேற்றப்பட்டு 32 அணிகள் பங்கேற்றுள்ள நாக் அவுட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
இந்நிலையில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்ஸிகோ இதுவரை ஒரு கோல்களை கூட விட்டுக்கொடுக்காமல் வலுவான அணியாக வலம்வருகிறது. அதுமட்டுமில்லாமல் ரவுண்ட் 32 வரை முன்னேறிய அந்த அணி ஈகுவடார் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் 2-0 என வென்று ரவுண்ட் 16-க்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.
இந்தசூழலில் அந்த நாட்டில் வெற்றிக்கொண்டாட்டம் கலைகட்டியது. மெக்சிகோ அணி 16ஆவது சுற்றுக்கு முன்னேறியதைத் தொடர்ந்து, மெக்சிகோ சிட்டியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 19 வயது இளம்பெண் உள்பட மூவர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மேயர் கிளாரா ப்ருகாடா இரங்கல் தெரிவித்துள்ளார்.

