செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக்கின் பகீர் குற்றச்சாட்டு; அமெரிக்க வீராங்கனை பகிர்ந்த பழைய கட்டுரை!

செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக்கின் பதிவினை ஒட்டி ஹங்கேரிய அமெரிக்க செஸ் வீராங்கனையான சுஷான் போல்கர் தனது கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.
திவ்யா தேஷ்முக், சுசன் போல்கர்
திவ்யா தேஷ்முக், சுசன் போல்கர்pt web

நாக்பூரைச் சேர்ந்த 18 வயதான சர்வதேச செஸ் மாஸ்டரான திவ்யா தேஷ்முக் கடந்தாண்டு நடந்த ஆசிய பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றவர். இவர் நெதர்லாந்து நாட்டிலுள்ள Wijk Aan Zeeல் நடந்த டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சமீபத்தில் கலந்து கொண்டார். இத்தகைய சூழலில் போட்டியின் போது பெண் போட்டியாளர்கள் நடத்தப்படும் விதம் குறித்து தனது வேதனை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக நீண்டதொரு பதிவினை பதிவிட்ட அவர், “நான் இதைப் பற்றி கடந்த சில காலமாகவே பேச விரும்பினேன். ஆனால் எனது போட்டி முடிவடையும் வரை காத்திருந்தேன். செஸ் போட்டிகளில் பெரும்பாலும் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை நான் கவனித்தேன். நான் சில போட்டிகளை விளையாடும் போது, மிக நன்றாக விளையாடுவதாக உணர்ந்தேன். அதுபற்றி நான் பெருமை கொண்டேன். ஆனால், பார்வையாளர்கள் விளையாட்டைப் பற்றி கவலைப்படவில்லை. மாறாக, என் முடி, உச்சரிப்பு, உடை போன்ற தேவையற்ற விஷயங்களில் தங்களது கவனத்தை செலுத்துகின்றனர்.

இதைக் கேட்டு நான் மிகவும் வருத்தமுற்றேன். பெண்கள் செஸ் விளையாடுகையில் அவர்களது ஆட்டங்கள், அவர்களது வலிமை போன்றவை பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை என்பது சோகமான உண்மை என்று நினைக்கின்றேன். என் நேர்காணல்களில் பார்வையாளர்களால் என் விளையாட்டு தவிர்த்து அனைத்து விவாதிக்கப்படுவதைக் கண்டு நான் ஏமாற்றம் அடைந்தேன். மிகச்சிலரே அதில் கவனத்தை செலுத்தினர்

எந்த ஒரு விளையாட்டு வீரரின் நேர்காணலுக்கு சென்றாலும் தனிப்பட்ட அளவிளான மதிப்பீடுகள் குறைவாகவும் அவர்களது விளையாட்டு குறித்தான உண்மையான பாராட்டுகள் இருக்கும். பெண்கள் குறைவாக மதிப்பிடப்படுகிறார்கள். பெண்களுக்கு சம அளவில் மரியாதை தரப்பட வேண்டும் என நான் நினைக்கின்றேன்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து ஹங்கேரிய - அமெரிக்க செஸ் வீராங்கனையான சுஷான் போல்கர், திவ்யா தேஷ்முக்கின் பதிவினை படித்த பின் 10 ஆண்டுகளுக்கு முன் தான் எழுதிய கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, “நான் இளம் செஸ் வீராங்கனையாக இருந்த போது முடிந்தவரை அழகற்றதாக இருக்க விரும்பினேன். எனது 20 வயதுவரை நான் மேக்கப்பைத் தொடவே இல்லை. ஏன் என பெரும்பாலானோர் அறிந்திருக்கமாட்டார்கள். நான் அதைப் பற்றி பேசவில்லை. உண்மையில் 2 விஷயங்கள் இருந்தன.

ஆல் மென் செஸ் போட்டிகளில் அப்போது நான் மட்டுமே பெண். நான் அந்த நேரத்தில் ஆண்களுக்கு எதிராக மட்டுமே விளையாடுவதை நான் தேர்ந்தெடுத்ததற்காக எனது நம்பர் 1 (உலக) தரவரிசையை நீக்கி FIDE என்னை கடுமையாக தண்டித்தது. ஆண் செஸ் வீரர்களில் நடத்தைகள் உண்மையில் பயங்கரமானது. நான் பல சமயங்களில் உயிருக்கு பயந்தேன். சிலர் என்னை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் தாக்க முயன்றனர்.

நான் போட்டியில் என்னை நிரூபிக்க முயன்றேன். எனது தோற்றத்தை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் கவலை கொள்ளவில்லை. எனது குடும்பத்தார் போட்டிகளின் போது எப்போதும் என்னுடன் இருந்து என்னைப் பாதுகாக்க முயற்சித்ததற்கு நான் நன்றியுள்ளவகாக இருந்தேன். இப்போது அதுபோன்ற விஷயங்கள் மாறியிருந்தாலும் அப்போது மோசமாக இருந்தது. இரண்டாவதாக நாங்கள் மிகவும் ஏழ்மையாக இருந்தோம். ஆடம்பரமான ஆடைகளுக்கு என்னிடம் பணம் இல்லை. என் முழுவாழ்க்கையாவும் அர்ப்பணித்த, நான் நேசிக்கும் விளையாட்டில் உள்ள உண்மைகள் மற்றும் பிரச்சனைகளை அம்பலப்படுத்தியதற்காக நான் இன்றும் பலரால் தடுப்புப் பட்டியலில் ( blacklisted) வைக்கப்பட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com