ராணுவ வாகனம் போல் தனது காரை மாற்றிய தோனி.. வைரலாகும் வீடியோ..!
ராஞ்சியின் தெருக்களில் போர் ஹெலிகாப்டர்கள் மற்றும் வீரர்களின் காட்சிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கார் வலம் வந்துக் கொண்டுருந்தது.. அது வேறு யாருடையதும் இல்லை. மகேந்திர சிங் தோனியின் புதிய இராணுவ அவதாரமான ஹம்மர் H2 காராக இருக்கலாம். ஆம் எம்.எஸ் தோனி தனது காரான ஹம்மர் H2-வை ராணுவ கார் போல அதன் நிறத்தை மாற்றியுள்ளார்.
ஆட்டோமொபைல் மீதான ஆர்வத்திற்கு பெயர் பெற்றவர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்க வாகன உற்பத்தியாளர் ஜெனரல் மோட்டார்ஸிடமிருந்து சக்திவாய்ந்த எஸ்யூவி ரக காரை வாங்கினார். இப்போது, 15 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அந்த காரை இந்திய இராணுவ வாகனத்தை போல புதியதாக மாற்றியுள்ளார்.
அப்படி புதுப்பிக்கப்பட்ட ஹம்மரின் வீடியோக்கள் தற்போது சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த வாகனத்தில் இப்போது போர் விமானங்கள், டாங்கிகள், விமானங்கள் மற்றும் இந்திய வீரர்கள் செயல்பாட்டில் இருப்பதை சித்தரிக்கும் குறிப்பிடத்தக்க கலைப்படைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த மாற்றத்தை ராஞ்சியை தளமாகக் கொண்ட ஒரு கார் ஸ்பெஷிபிகேஷன் ஸ்டுடியோவால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஸ்டுடியோ நிறுவனர் அச்சுத் கிஷோர் இது குறித்து கூறுகையில், தோனி தனிப்பட்ட முறையில் இராணுவ கருப்பொருள் கொண்ட வடிவமைப்பைக் கோரியதாகவும், அது தற்போது வெற்றிகரமாக முடிக்கப்பட்டு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
எம்.எஸ். தோனிக்கும் ராணுவத்துக்கும் என்ன தொடர்பு?
2011 ஆம் ஆண்டில், அவருக்கு பிராந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது. அவர் பாரா படைகளுடன் பயிற்சி பெற்றுள்ளார், மேலும் பாராசூட் தாவல்களையும் கூட நிகழ்த்தியுள்ளார். ராணுவ வீரர்களுடன் தொடர்ந்து நேரத்தை செலவிடுவதற்குப் பெயர் பெற்ற தோனி, அவர்களின் ஒழுக்கம் மற்றும் தைரியத்திலிருந்து உத்வேகம் பெறுவது பற்றி அடிக்கடி பேசுவார்.
2019 ஐசிசி உலகக் கோப்பையின் போது, இந்திய ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, பாரா சிறப்புப் படைகளின் சின்னமான 'பலிதான் பேட்ஜ்' இடம்பெற்ற கையுறைகளை தோனி அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.