தவான், ரோகித் அபார சதம்: பாகிஸ்தானை மீண்டும் பந்தாடியது இந்திய அணி!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றுப் போட்டியில், பாகிஸ்தானை இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. இரண்டு லீக்கிலும் தோல்வி யடைந்த இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறிவிட்டன. அடுத்து, சூப்பர் 4 சுற்று போட்டி நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் செல்லும். இந்த நிலையில் சூப்பர்-4 சுற்றில் துபாயில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது.
Read Also -> ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பங்களாதேஷ் திரில் வெற்றி!
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் களம் இறங்கினர். சேஹல் வீசிய பந்தில் இமாம் உல்-ஹக் (10 ரன்) எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆனால் நடுவர் கொடுக்க மறுத்ததால் ரோகித் சர்மா அப்பீல் செய்தார். இதில் இமாம் உல்-ஹக் அவுட் ஆனது உறுதியானது. அடுத்து பாபர் அஸாம், பஹார் ஜமானுடன் இணைந்தார். பஹார் 31 ரன்கள் எடுத்திருந்தபோது, குல்தீப் பந்தை, தரையில் முட்டி போட்டு அடிக்க முற்பட்டு எ.பி.டபிள்யூ ஆனார்.
தொடர்ந்து கேப்டன் சர்ப்ராஸ் அகமது, பாபர் அஸாமுடன் சேர்ந்தார். ஜடேஜா பந்து வீச்சில் ஒரு ரன் எடுப்பதற்கு ஓட முயற்சித்த சர்ப்ராஸ் அகமது, திடீரென எதிர்முனையில் இருந்த பாபரை திரும்பி விடும்படி சைகை செய்ய, அதற்குள் துரிதமாக செயல்பட்ட சேஹல் ரன் அவுட் செய்தார். பாபர் 9 ரன்னில் பெவிலியன் திரும்ப, தடுமாறத் தொடங்கியது பாகிஸ்தான். அப்போது அந்த அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது.
Read Also -> தொடர்ந்து தோல்வி: இலங்கை கேப்டன் திடீர் நீக்கம்!
அடுத்து சோயிப் மாலிக், சர்ப்ராஸுடன் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சோயிப் மாலிக் 64 பந்துகளில் அரை சதம் கடந்தார். இந்த தொடரில் அவர் அடித்த 2-வது அரைசதம் இது. ஸ்கோர் 38.5 ஓவர்களில் 165 ரன்னாக உயர்ந்த போது சர்ப்ராஸ் அகமது (44 ரன்) குல்தீப் பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு சர்ப்ராஸ் அகமது-சோயிப் மாலிக் ஜோடி 107 ரன்கள் திரட்டியது.
அடுத்து ஆசிப் அலி, சோயிப் மாலிக்குடன் சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடினார்கள். 43.1 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 200 ரன்களை எட்டியது. சோயிப் மாலிக் 78 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ஆசிப் அலி 30 ரன்களில் சேஹல் பந்து வீச்சிலும், ஷதாப் கான் (10) பும்ரா பந்து வீச்சிலும் அடுத்தடுத்து போல்டு ஆனார்கள். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் பும்ரா, சேஹல், குல்தீப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தவானும் ரோகித்தும் பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டு ரசிகர்களை குஷிபடுத்தினர். இருவரையும் பிரிக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் செய்த சாகசங்கள் எதுவும் எடுபடவில்லை. 6 பேர் பந்துவீசியும் யாருக்கும் விக்கெட் கிடைக்கவில்லை. அதோடு இந்திய வீரர்கள் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பையும் பாகிஸ்தான் வீரர்கள் கோட்டை விட்டனர். இதை பயன்படுத்திக்கொண்ட இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
Read Aslo -> பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி செய்த சாதனை..!
ஷிகர் தவான் 100 பந்துகளில் 2 சிக்சர், 16 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார். இந்த தொடரில் அவர் அடித்த 2-வது சதம் இது. ஒருநாள் போட்டியில் அவரது 15-வது சதம். கேப்டன் ரோகித் சர்மா 111 ரன்னுடனும் ராயுடு 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 19-வது சதத்தை பூர்த்தி செய்த ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களையும் கடந்தார். ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்திய அணி . அத்துடன் பாகிஸ்தான் அணியை மீண்டும் வீழ்த்தி இருக்கிறது. ஏற்கனவே லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்றிருந்த இந்திய அணி, இப்போது மீண்டும் அந்த அணியை வீழ்த்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. நாளை நடக்கும் கடைசி சூப்பர்-4 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இந்திய அணி எதிர்கொள்கிறது.