போதையால் கிரிக்கெட் வாழ்வை இழந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேவிட் முர்ரே மறைவு!
கிரிக்கெட் வாழ்வில் சர்ச்சைகளுக்கு பெயர் போன வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் டேவிட் முர்ரே காலமானார்.
பிரபல வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் எவர்டென் வீக்கெஸின் மகன் தான் டேவிட் அந்தோணி முர்ரே. 1973 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். விக்கெட் கீப்பராக தன்னுடைய பணியை சிறப்பாக செய்தார். ஆனால், போதைப் பழக்கத்திற்கு அடிமையான இவர், அந்த பழக்கம் காரணமாக பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளானார். அதனால், 1975-76 ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், பலரது சிபாரிகளின் பெயரில் மீண்டும் விளையாட அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் அவரது போதைப் பழக்கத்தை அவர் நிறுத்தியபாடில்லை, 1978 இல் இந்தியாவுக்கு கிரிக்கெட் பயணம் வந்திருந்த போது அவரது போதை பழக்கம் இன்னும் உச்சத்திற்கு சென்றது. பின்னர் பல்வேறு சர்ச்சைகளை கடந்த அவரது கிரிக்கெட் வாழ்க்கை 1982இல் முடிவுக்கு வந்தது. பொறுத்து பொறுத்து பார்த்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம், தென்னாப்ரிக்க சுற்றுப்பயணத்தின்போது 1983இல் அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.
19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 601 ரன்களும், 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 45 ரன்களும் எடுத்தார். மூன்று அரைசதம், ஒரு இரட்டை சதம் அடித்தார். பிரிட்ஜ்டவுனில் (Bridgetown) உள்ள தனது வீட்டின் முன்பு மயங்கி விழுந்து இன்று அவர் காலமானார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
முர்ரேவின் மகன் ரிக்கி ஹொய்டியும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் விக்கெட் கீப்பராக 1990களில் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.