'துவக்கத்திலே தோனி கேப்டன் ஆகியிருந்தாலும் சிஎஸ்கே பிளே ஆஃப்க்கு சென்றிருக்காது' - ஹர்பஜன்

'துவக்கத்திலே தோனி கேப்டன் ஆகியிருந்தாலும் சிஎஸ்கே பிளே ஆஃப்க்கு சென்றிருக்காது' - ஹர்பஜன்
'துவக்கத்திலே தோனி கேப்டன் ஆகியிருந்தாலும் சிஎஸ்கே பிளே ஆஃப்க்கு சென்றிருக்காது' - ஹர்பஜன்

துவக்கத்தில் இருந்தே தோனி கேப்டன் ஆகியிருந்தாலும் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றிருக்காது என்று முன்னாள் சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த வாரம் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 9வது தோல்வியை சந்தித்து, பிளேஆஃப் சுற்றிலிருந்து வெளியேறிவிட்டது. சீசன் துவங்கியபோது தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்ததை அடுத்து, ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கேயின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், சென்னை அணி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்ததால் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்தார் ஜடேஜா.

கேப்டன் பதவியை தோனி மீண்டும் ஏற்றபோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப்களுக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தது. சீசனின் நடுவே சென்னை அணியின் கேப்டனாக தோனி திரும்பியது ரசிகர்களிடையே புது நம்பிக்கையைக் கொண்டுவந்தது. ஆனால் தொடர் தோல்விகளால் நான்கு முறை ஐபிஎல் கோப்பை தனதாக்கிய சென்னை அணி 2வது முறையாக பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லத் தவறிவிட்டது.

தொடக்கத்தில் இருந்தே தோனி கேப்டனாக இருந்திருந்தால், ஐபிஎல் 2022ல் சிஎஸ்கே பிளேஆஃப் சுற்றுக்கு சென்றிருக்குமா என்று ரசிகர்கள் விவாதிக்க துவங்கினர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் சிஎஸ்கே வீரருமான ஹர்பஜன் சிங், தோனி சீசன் முழுவதும் சிஎஸ்கேயின் கேப்டனாக இருந்திருந்தாலும் அந்த அணி இன்னும் பிளேஆஃப்களுக்குச் செல்லத் தவறியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

“தோனி அணியின் கேப்டனாக இருந்திருந்தால், அது சென்னை அணிக்கு உண்மையில் பலனளிக்கும், மேலும் புள்ளிகள் பட்டியலில் உயர்ந்த இடத்தில் அமர்ந்திருக்கும், ஆனால் அவர்கள் பிளே ஆஃப்களுக்கு தகுதி பெற்றிருக்க மாட்டார்கள். ஏனெனில் இது அவர்கள் அணி இல்லை. அவர்களிடம் வலுவான பந்துவீச்சு இல்லை. விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் தீபக் சாஹர் காயமடைந்தார். பேட்டர்கள் கூட அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை,” என்றார் ஹர்பஜன் சிங்.

“எவ்வாறாயினும், இந்த சீசனில் அணிகளுக்கு ஹோம் அட்வான்டேஜ் வழங்கப்பட்டிருந்தால், ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். இதே அணியுடன் இருந்தாலும் சென்னை அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும். ஏனென்றால் ஹோம் கிரவுண்டில் விளையாடும் போது வித்தியாசமாக விளையாடுவார்கள். டெல்லி மற்றும் மும்பையும் சொந்த மண்ணில் வலுவாக உள்ளன” என்று மேலும் குறிப்பிட்டார் ஹர்பஜன் சிங்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com