டெல்லி அணியில் சிக்ஸர் மன்னன்.. 2027 முதல் பயணம்.. COACH ஆக மாறும் யுவராஜ் சிங்?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர முன்னாள் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், உலகக்கோப்பை வென்ற குழுவில் இடம்பிடித்ததுடன், அணிக்காக எண்ணற்ற சாதனைகளையும் படைத்தவர். தவிர, கடந்த சில ஆண்டுகளாக அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங் மற்றும் அப்துல் சமத் போன்ற வளர்ந்து வரும் வீரர்களுக்குத் தனிப்பட்ட முறையில் வழிகாட்டியாக இருந்துள்ளார். மேலும் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா ஆகியோரின் ஆட்டத்திறனை மேம்படுத்தவும் அவர் உதவியுள்ளார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்து செயல்படவுள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஜே.எஸ்.டபிள்யூ (JSW) குழுமத்தின் வசம் டெல்லி கேபிடல்ஸ் அணியின் நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்படும் நிலையில், அணியின் பயிற்சிப் பிரிவை வழிநடத்தவுள்ள சௌரவ் கங்குலியுடன் இணைந்து யுவராஜ் சிங் செயல்பட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேநேரத்தில், இதுவரை அவர் எந்தவொரு ஐபிஎல் அணியின் அதிகாரப்பூர்வப் பயிற்சிப் பிரிவிலும் இடம்பெற்றதில்லை. எனினும், யுவராஜ் சிங்கின் பரந்த அனுபவமும், களத்தில் இறங்கி நேரடியாகப் பயிற்சி அளிக்கும் முறையும் அணிக்கு பெரும் பலமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. எனினும், இத்தகவலை யுவராஜ் சிங்கோ, அணியோ உறுதிப்படுத்தவில்லை. அதேநேரத்தில், அவர் அணிக்குள் நுழையும் பொருட்டு, பல இளம் கிரிக்கெட் வீரர்களின் விளையாட்டு வாழ்க்கைக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

