
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியானது டொமினிகாவில் நடைபெற்றுவருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினின் அற்புதமான பவுலிங்கால் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் விளையாடிவரும் இந்திய அணியில் அறிமுக போட்டியில் விளையாடும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடிவருகிறார்.
டெஸ்டின் இரண்டாவது நாளில் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார் ஜெய்ஸ்வால். இந்த சாதனையை எட்டிய 17வது இந்திய டெஸ்ட் அறிமுக வீரர் என்ற பெருமை பெற்ற அவர், 215 பந்துகளில் 11 பவுண்டரிகள் அடித்து சதத்தை பதிவு செய்தார். அவருடன் சேர்ந்து அற்புதமான பார்ட்னர்ஷிப் போட்ட இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 10வது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
இவர்களது அபாரமான ஆட்டத்தால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில், அதிகபட்ச முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பை இந்திய அணி பதிவு செய்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 229 ரன்களை ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் இணை சேர்த்தது.
3வது நாளிலும் சிறப்பாக பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால், 150 ரன்களை கடந்து அசத்தினார். இதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் 150 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை எட்டினார். இதற்கு முன் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்திருந்த ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்திய மண்ணில் தான் இந்த சாதனையை செய்திருந்தனர். இந்நிலையில் அறிமுக டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் யஷஸ்வி.
150 ரன்களை பதிவு செய்திருக்கும் ஜெய்ஸ்வால், குறைந்த வயதில் இதை பதிவு செய்த 5வது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 21 வயது 196 நாட்களில் இந்த ரெக்கார்டை படைத்திருக்கும் ஜெய்ஸ்வால், 47 வருடங்களுக்கு பின் இப்படியொரு சாதனையை செய்திருக்கிறார். அதன்படி இதற்கு முன்பு பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியான்டத், 1976ஆம் ஆண்டு 19 வயது 119 நாட்களில் 150 ரன்கள் அடித்ததே குறைந்த வயதில் அடிக்கப்பட்ட அதிக ரன் சாதனையாக இருக்கிறது. அந்த பட்டியலில் 19 வயது 149 நாட்கள் (1929), 19 வயது 354 நாட்கள் (1965), 20 வயது 226 நாட்கள் (1930) என மற்ற வீரர்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.
தற்போது இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ரன்களுடன் விளையாடி வருகிறது. ஜெய்ஸ்வால் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி அரைசதம் அடித்து ஆடிவருகிறார்.