மல்யுத்தத்தில் 2வது இன்னிங்ஸ்.. மீண்டும் களத்துக்குத் திரும்பும் வினேஷ் போகத்!
ஓய்வுபெற்ற வீராங்கனை வினேஷ் போகத் தனது ஒலிம்பிக் கனவைத் துரத்துவதற்காக மீண்டும் மல்யுத்தத்திற்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பாரிஸில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவர், ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டியை எட்டிய போதிலும் அவருக்கு பதக்கம் மறுக்கப்பட்டது. அன்றைய தினத்தின் காலையில் நிர்ணயிக்கப்பட்ட எடை வரம்பைவிட 100 கிராம் அதிகமாக இருந்ததற்காக வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, உடனடியாக மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். பின்னர், தாயகம் திரும்பிய அவர், தான் வகித்துவந்த ரயில்வே வேலையையும் ராஜினாமா செய்தார். அதன்பிறகு, காங்கிரஸில் இணைந்த அவர், அக்கட்சி சார்பில் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகத் தேர்வானார். இந்த நிலையில், தனது ஒலிம்பிக் கனவைத் துரத்துவதற்காக மீண்டும் மல்யுத்தத்திற்கு வருவதாக வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ”பாரிஸ் தான் இறுதி முடிவா என மக்கள் தொடர்ந்து கேட்டப்படியே இருந்தார்கள். நீண்டகாலமாக, இதற்கு என்னிடமிருந்து பதில் இல்லை. இதனால் நான் அழுத்தத்திலிருந்து, எதிர்பார்ப்புகளிலிருந்து, என் சொந்த லட்சியங்களிலிருந்துகூட விலக வேண்டியிருந்தது. எனது பயணத்தின் பாரங்கள், உச்சங்கள், மனவேதனைகள், தியாகங்கள் மற்றும் உலகம் இதுவரை கண்டிராத என்னைப் பற்றிய பதிப்புகளைப் புரிந்துகொள்ள நான் நேரம் எடுத்துக்கொண்டேன். அந்த பிரதிபலிப்பில் எங்கோ, நான் உண்மையைக் கண்டேன், நான் இன்னும் இந்த விளையாட்டை விரும்புகிறேன். நான் இன்னும் போட்டியிட விரும்புகிறேன். இந்த முறை, நான் தனியாக நடக்கவில்லை. என் மகன் என் அணியில் இணைகிறான், LA ஒலிம்பிக்கிற்கான இந்த பாதையில் என் சிறிய சியர்லீடர் அவன்” என அவர் தனது இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டுமுதல் ஒலிம்பிக்கின் பயணத்தில் கால்பதித்து வரும் அவர், அந்த ஆண்டு, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக காலிறுதிப் போட்டியிலிருந்து விலகினார். அடுத்து, 2021ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் நுழைந்த அவர், காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார்.
இறுதியாக, 2024ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தும் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டார். அப்போது, தமது தகுதிநீக்கம் குறித்து வேர்ல்ட் ரெஸ்லிங் (UWW)இல் மேல்முறையீடு செய்தார். ஆனாலும், அவரது மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதுடன், வினேஷின் தகுதி நீக்கத்தையும் உறுதிப்படுத்தியது. அதைத் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து விடை காண ஓய்வு பெற்ற நிலையில், தற்போது மல்யுத்தத்தில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளார்.

