ஹரியானா அரசு வழங்கிய 3 ஆப்ஷன்.. ரூ.4 கோடியைத் தேர்வு செய்த வினேஷ் போகத்! விமர்சனத்திற்கு பதிலடி!
கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வீராங்கனை வினேஷ் போகட், உடனடியாக மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். பின்னர், தாயகம் திரும்பிய அவர், தான் வகித்துவந்த ரயில்வே வேலையையும் ராஜினாமா செய்தார். அதன்பிறகு, காங்கிரஸில் இணைந்த அவர், அக்கட்சி சார்பில் நடைபெற்று முடிந்த ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகத் தேர்வானார். இந்த நிலையில், ”ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு மாநில அரசின் விளையாட்டுக் கொள்கையின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் வினேஷ் போகத்துக்கும் வழங்கப்படும்” என்று ஹரியானா மாநில அரசு தெரிவித்திருந்தது. கடந்த மார்ச் மாத இறுதியில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, ரூ.4 கோடி ரொக்கப் பரிசு அல்லது ஹரியானா ஷாஹ்ரி விகாஸ் பிரதிகரன் (HSVP) கீழ் ஒரு நிலம் ஒதுக்கீடு அல்லது குரூப் A வேலை ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை வினேஷ் போகத் தேர்வு செய்யலாம் என ஹரியானா அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து, அரசு அறிவித்ததில் ரூ.4 கோடி பரிசுத் தொகையை வினேஷ் போகத் தனது விருப்பமாக தேர்வு செய்தார். இதுதொடர்பான கடிதத்தை மாநில அரசிடம் சமர்ப்பித்து உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். எனினும், இந்த ரூ.4 கோடி பரிசுத் தொகையை அவர் தேர்வு செய்ததற்காக பலரும் விமர்சித்தனர். இதற்கு வினேஷ் போகத் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பதிவில், "2 ரூபாய்க்கு ட்வீட் செய்து இலவச அறிவைப் பகிர்ந்துகொள்பவர்கள்... கவனமாகக் கேளுங்கள்!உங்களுக்குத் தெரியப்படுத்த, நான் உங்களுக்குச் சொல்கிறேன் - இதுவரை, கோடிக்கணக்கான மதிப்புள்ள (விளம்பரத்தில் நடிக்கும்) சலுகைகளை நான் நிராகரித்துவிட்டேன். குளிர்பானங்கள் முதல் ஆன்லைன் கேமிங் வரை. ஆனால் நான் என் கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்துகொண்டதில்லை. நான் எதைச் சாதித்திருந்தாலும், அதை நேர்மையான கடின உழைப்பாலும், என் அன்புக்குரியவர்களின் ஆசீர்வாதத்தாலும் செய்திருக்கிறேன். அதைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். சுயமரியாதை கொண்ட தாயின் பாலில் கரைந்த மண்ணின் மகள் நான். உரிமைகள் பறிக்கப்படுவதில்லை, வெல்லப்படுகின்றன என்பதை என் முன்னோர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். எனக்கு நெருக்கமான ஒருவர் சிக்கலில் இருக்கும்போது, அவர்களுடன் ஒரு சுவர்போல எப்படி பாதுகாத்து நிற்பது என்பதும் எனக்குத் தெரியும்" என அதில் பதிவிட்டுள்ளார்.