WPL 2025 | குஜராத்தை வெளியேற்றி கெத்தாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மும்பை!
இந்தியாவில் ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருவதுபோலவே, மகளிர் ஐபிஎல்லும் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்து வருகிறது. அந்த ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கடந்த ஆண்டு நடைபெற்ற 2-வது சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மகுடம் சூடின. இந்த நிலையில் 3-வது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது.
டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடிய இந்தத் தொடர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. அதன்படி, லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் (5 வெற்றி, 3 தோல்வி, 10 புள்ளி) முதலிடம் பிடித்து தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மும்பை இந்தியன்ஸ் (10 புள்ளி) ரன்-ரேட் அடிப்படையில் பின்தங்கியதால் 2-வது இடமும், குஜராத் ஜெயன்ட்ஸ் (8 புள்ளி) 3-வது இடமும் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (6 புள்ளி), உ.பி.வாரியர்ஸ் (6 புள்ளி) முறையே 4-வது, 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறின.
இதையடுத்து, நேற்று (மார்ச் 13) வெளியேற்றுதல் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளுக்கு 213 ரன்கள் எடுத்தது. பின்னர், 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி, 19.2 ஓவர்களில் 166 அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து மும்பை அணி, 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மும்பை அணியும், டெல்லி அணியும் நாளை இறுதிப்போட்டியில் சந்திக்க உள்ளன.