WPL 2025 | குஜராத் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் புதிய சாதனை!
மகளிர் ப்ரீமியர் லீக் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தொடரின் 5ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் நேற்று மோதின. வதோதராவில் நடந்த கோதம்பி மைதானத்தில் நடந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தொடர்ச்சியாக விக்கெட்களை பறிகொடுத்தது. பெத் மூனி (1), லாரா வொல்வார்ட் (4), தயாளன் ஹேமலதா (9), ஆஷ்லே கார்ட்னர் (10) என அடுத்தடுத்து வெளியேறினர். பின் வந்த ஹர்லீன் தியோல் சற்றே நிலைத்து ஆடி 32 ரன்களைச் சேர்த்தார்.
20 ஓவர்கள் முடிவில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய மும்பை அணியில் ஹெய்லி மேத்யூஸ் 3 விக்கெட்களையும், அமிலியா கெர், சிவர் ப்ரன்ட் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
மகளிர் ப்ரீமியர் லீக்கில் எதிரணியை அதிகமுறை ஆல் அவுட் செய்த அணிகளின் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி பெங்களூரு உடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டது. இரு அணிகளும் இதுவரை 4 முறை எதிரணிகளை ஆல் அவுட் செய்துள்ளன.
121 ரன்கள் எனும் எளிய இலக்கினைக் கொண்டு களமிறங்கிய மும்பை அணியிலும் வேகமாக இரு விக்கெட்கள் விழுந்தன. ஆனால், ஒன் டவுன் பேட்ஸ்மேனாக வந்த சிவர் ப்ரன்ட் அசத்தலாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். சிறப்பாக ஆடிய சிவர் ப்ரண்ட் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் மும்பை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.