“நாங்க 11 பேர்..எங்களை தாண்டிதான்”தோல்வியே இல்லாமல் பீடுநடைபோடும் இந்தியா; லீக் ஆட்டங்களின் தொகுப்பு

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தான் விளையாடிய 9 லீக் போட்டிகளிலும் வென்று அரையிறுதி சுற்றுக்கு நுழைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணிpt web

அக்டோபர் 5 ஆம் தேதி கோலாகலத்துடன் தொடங்கிய உலகக்கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 45 லீக் ஆட்டங்கள் நடந்துள்ளது. ஒவ்வொரு அணியும் தலா 9 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. அரையிறுதிக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.

இதில் இந்திய அணி ஆடிய 9 ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்காமல் அனைத்திலும் வெற்றி பெற்று கெத்து காட்டி வருகிறது.

1. முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை தெறிக்கவிட்ட இந்திய அணி!

நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8 ஆம் தேதி இந்த போட்டி நடந்தது.

அதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. உலகக்கோப்பை என்றாலே வேறுமாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆஸ்திரேலியா அந்த போட்டியில் 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களையும், பும்ரா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பின் களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவர்களில் இலக்கை எட்டியது. 97 ரன்களை அடித்து அசத்திய கே.எல்.ராகுல் ஆட்டநாயகனாக தெர்வு செய்யப்பட்டார். அந்தப் போட்டியில் விராட் 85 ரன்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. ரோகித் ருத்ரதாண்டவம் - சரண்டர் ஆன ஆப்கானிஸ்தான் அணி!

அக்டோபர் 11 ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 272 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் பும்ரா 4 விக்கெட்களையும் ஹர்திக் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பின் களமிறங்கிய இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 273 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 131 ரன்களைக் குவித்த ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். விராட் கோலி 55 ரன்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

3. பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா - பணிந்த பாகிஸ்தான்!

அக்டோபர் 14 ஆம் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியில் பும்ரா, சிராஜ், ஹர்திக், குல்தீப், ஜடேஜா என அனைவரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

பின் களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 192 எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 86 ரன்களையும் ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களையும் குவித்திருந்தனர். ஆட்டநாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார். 7 ஓவர்களை வீசிய அவர் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். 1 ஓவர் மெய்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4. சதம் விளாசிய விராட் - எளிதில் வீழ்ந்தது வங்கதேசம்!

அக்டோபர் 19 ஆம் தேதி நடந்த இந்தியா - வங்கதேசம் இடையிலான போட்டி புனேவில் உள்ள மஹாராஷ்ட்ரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 256 ரன்களைக் குவித்தது. இந்திய அணியில் பும்ரா, சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

பின் களமிறங்கிய இந்திய அணி அசத்தலாக ஆடி 41.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 261 ரன்களை எடுத்து வெற்றி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 103 ரன்களையும் கில் 53 ரன்களையும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக விராட்கோலி தேர்வு செய்யப்பட்டார்.

5. சதத்தை நழுவ விட்டாலும் அணியை கரை சேர்த்த விராட் கோலி - சரண்டர் ஆன நியூசிலாந்து!

அக்டோபர் 22 ஆம் தேதி தர்மசாலாவில் நடந்த போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 273 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக டேரி மிட்செல் 130 ரன்களை எடுத்திருந்தார். இந்த போட்டியில் ஷமி 5 விக்கெட்களை வீழ்த்தி நியூசிலாந்து அணியை மிரளவைத்தார்.

பின் களமிறங்கிய இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்களை மட்டுமே இழந்து 274 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட்கோலி 95 ரன்களைக் குவித்தார். ஆட்டநாயகனாக ஷமி தேர்வு செய்யப்பட்டார். 10 ஓவர்களை வீசிய ஷமி 54 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.

6. குறைவான் ஸ்கோர்! இருந்தாலும் ஷமி, பும்ரா வேகத்தில் வீழ்ந்தது இங்கிலாந்து!

அக்டோபர் 29 ஆம் தேதி லக்னோவில் நடந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 229 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 87 ரன்களை குவித்திருந்தார்.

பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ரன்களுக்கு சுருண்டது. மிரட்டலாக பந்துவீசிய இந்திய பவுலர்களில் ஷமி 4 விக்கெட்களையும் பும்ரா 3 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர். ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

7. கில் 92, கோலி 88, ஸ்ரேயாஸ் 82 - பேட்டிங்கில் மிரட்டிய இந்தியா - 55 ரன்னில் சுருண்டது இலங்கை!

நவம்பர் 2 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி அசத்தலாக ஆடி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 357 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கில் 92 ரன்களையும், கோலி 88 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும் எடுத்திருந்தனர்.

பின் களமிறங்கிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 55 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியில் ஷமி 5 விக்கெட்களையும், சிராஜ் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ஷமி தேர்வு செய்யப்பட்டார். இவர் 5 ஓவர்களை மட்டுமே வீசி 18 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதில் ஒரு ஓவர் மெய்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

8. ”நாங்கதான் டாப் .. வேற யாரும் உம்ம்ம்” - தென்னப்ரிக்காவை போகிற போக்கில் வீழ்த்திய இந்திய அணி!

நவம்பர் 5 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 326 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக விராட் 101 ரன்களை எடுத்திருந்தார்.

பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 27.1 ஓவர்களில் 83 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பந்துவீச்சில் மிரட்டிய இந்திய அணியில் ஜடேஜா 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்ட்நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

ரோகித் to கே.எல்.ராகுல் - ஒரே போட்டியில் சரவெடியாய் வெடித்த இந்திய பேட்ஸ்மேன்கள்! - வீழ்ந்தது நெதர்லாந்து!

நவம்பர் 12 ஆம் தேதி நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா நெதர்லாந்து அணிகள் மோதின. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி நெதர்லாந்து பந்துவீச்சை சிதறடித்தது. 50 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 410 ரன்களைக் குவித்தது இந்தியா. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் 128 ரன்களையும் ராகுல் 102 ரன்களையும் குவித்தனர்.

411 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய நெதர்லாந்து அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்துன் 250 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் பும்ரா, சிராஜ், குல்தீப், ஜடேஜா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார். 94 பந்துகளை விளையாடிய அவர் 10 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களை அடித்து 128 ரன்களைக் குவித்தார்.

தான் விளையாடிய 9 லீக் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. எங்கும் ஒன் மேன் ஷோ இல்லாமல் அணியாகவே சிறப்பாக விளையாடியுள்ளது இந்திய அணி. ஒரு போட்டியில் பேட்ஸ்மேன்கள் அசத்தினால் இன்னொரு போட்டியில் பந்துவீச்சாளர்கள் சூப்பர்மேன்களாக மாறுகின்றனர். பீல்டிங்கிலும் இந்திய அணி அசத்தலாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதே நிலை தொடரும் பட்சத்தில் இந்திய அணி கோப்பையை முத்தமிட இன்னும் இரு போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. நவம்பர் 15 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. நவம்பர் 16 ஆம் தேதி இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது தென்னாப்ரிக்கா.

கடந்த 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. சுமார் 28 ஆண்டுகளுக்கு பின் தோனி கோப்பையை வென்று கொடுத்தார். அந்த கோப்பையை ரோஹித் தலைமையிலான இந்திய அணி மீண்டும் ஏந்துவதற்கு ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com