world boxing championships 2025.. இந்தியாவுக்கு இன்னொரு தங்கம்.. யார் இந்த மீனாக்ஷி ஹூடோ?
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் 48 கிலோ எடைப் பிரிவில், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற கஜகஸ்தானின் நசிம் கைசைபேயை, இந்திய வீராங்கனை மீனாக்ஷி ஹூடோ வீழ்த்தி சாதனை படைத்தார்.
பிரிட்டனின் லிவர்பூல் நகரில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025 தொடர் நடைபெற்றது. இதில், நேற்று நடைபெற்ற 48 கிலோ எடைப் பிரிவில், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற கஜகஸ்தானின் நசிம் கைசைபேயை, இந்திய வீராங்கனை மீனாக்ஷி ஹூடோ சாதனை படைத்தார். இதன்மூலம் இந்தியாவிற்கு இன்னொரு தங்கப் பதக்கத்தை வாங்கிக் கொடுத்தார். முன்னதாக, 57 கிலோ எடைப் பிரிவுக்கான இறுதிப் போட்டியில், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த போலந்தின் ஜூலியா செரெமெட்டாவை 4-1 என்ற கணக்கில் மற்றொரு இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா வீழ்த்தி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். மேலும், மகளிருக்கான 80 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீராங்கனை நுபுர், வெள்ளிப் பதக்கமும், இதேபிரிவில், மற்றொரு வீராங்கனையான பூஜா ராணி, வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
யார் இந்த மீனாக்ஷி ஹூடோ?
ரோஹ்தக்கிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள லாரி ஓட்டுநர்களுக்குப் பெயர் பெற்ற ரூர்கி கிலோய் கிராமத்தில் வசித்து வரும் மீனாக்ஷியின் தந்தை, ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஆவார். அவருடைய வருமானத்திலேயே குடும்பம் நகர்கிறது. மீனாக்ஷியுடன் பிறந்த 4 பேரில் அவர் மட்டுமே இளையவர். இதில், மற்ற மூன்று பேரும் விளையாட்டில் ஆர்வம் செலுத்தவில்லை. 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் சீனியர் நேஷனல்ஸில் தங்கம் வென்ற அவர், நடப்பாண்டில் தனது உச்சத்தை எட்டினார். இந்த ஆண்டு, முன்னாள் உலக சாம்பியன் நீது கங்காஸை வீழ்த்தி தேசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். பின்னர் தேசிய தேர்வு சோதனைகளில் அதே எதிராளியை மீண்டும் ஒருமுறை வீழ்த்தினார்.