உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்.. இந்திய வீராங்கனைகள் அசத்தல்.. தங்கம் வென்ற ஜாஸ்மின்!
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், 24 வயதான இந்தியாவின் இளம் வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்திய வீராங்கனைகள் அசத்தல்
பிரிட்டனின் லிவர்பூல் நகரில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025 தொடர் நடைபெற்றது. இதில், 57 கிலோ எடைப் பிரிவுக்கான இறுதிப் போட்டியில், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த போலந்தின் ஜூலியா செரெமெட்டாவை 4-1 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா வீழ்த்தி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். நடப்பு தொடரில், இந்தியா வென்றுள்ள முதல் தங்கம் இதுவாகும்.
மறுபுறம், மகளிருக்கான 80 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீராங்கனை நுபுர், வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். போலந்து வீராங்கனை அகதா காக்ஸ்மார்ஸ்காவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி அவர் வெற்றிவாகை சூடினார். இதேபிரிவில், வெண்கலப் பதக்கத்திற்கு நடைபெற்ற போட்டியில், அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி மற்றொரு வீராங்கனை பூஜா ராணி, பதக்கத்தை வென்றார்.
யார் இந்த ஜாஸ்மின் லம்போரியா?
தங்கப்பதக்கம் வென்றது குறித்து ஜாஸ்மின், “இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உலக சாம்பியனாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 2024 பாரிஸில் நான் சீக்கிரமாக வெளியேறிய பிறகு, நான் அங்கிருந்து சென்று எனது திறமையை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மேம்படுத்திக் கொண்டேன். இது ஒரு வருட தொடர்ச்சியான உழைப்பின் விளைவாகும்" எனத் தெரிவித்தார்.
ஹரியானா மாநிலம் பிவானியில் பிறந்த அவர், சமீபத்தில்தான் அவர் தன்னுடைய 24வது பிறந்த நாளைக் (2001, ஆகஸ்ட் 30) கொண்டாடினார். புகழ்பெற்ற ஹவா சிங் அவரது கொள்ளுத் தாத்தா ஆவார். ஜெய்ஸ்மினின் தாத்தாவான கௌரவ கேப்டன் சந்தர் பான் லம்போரியா ஆவார். அவர் ஒரு மல்யுத்த வீரர். முன்னாள் தேசிய சாம்பியன்களும் அவரது மாமாக்களுமான சந்தீப் சிங் மற்றும் பர்விந்தர் சிங் ஆகியோரே அவருக்கு பயிற்சி அளித்தனர். 2022ஆம் ஆண்டு பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற ஏழு இந்திய குத்துச்சண்டை வீரர்களில் ஜாஸ்மினும் ஒருவராக இருந்தார். அப்போது, பெண்கள் 60 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அவரது வெண்கலப் பதக்கம் குத்துச்சண்டையில் இந்தியாவின் முதல் பதக்கமாகும். அதேபோல், ஜாஸ்மின் 2021 ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் வெண்கலப் பதக்கம் வென்றார். வெண்கலப் பதக்கம் வென்றபோது அவருக்கு வயது 19தான். முன்னதாக, கடந்த ஜூலை மாதம், கஜகஸ்தானில் நடந்த 2025 உலக குத்துச்சண்டை கோப்பையில் ஜாஸ்மின் தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.