மகளிர் உலகக் கோப்பை | பாகிஸ்தானைப் பந்தாடிய இந்தியா.. புள்ளிப் பட்டியலில் முதலிடம்!
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி பாகிஸ்தானை அணி வீழ்த்தியது.
8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகள் பிரத்திகா ராவல் (31 ரன்கள்), ஸ்மிருதி மந்தனா (23 ரன்கள்), ஹர்லீன் டியோல் (46 ரன்கள்) ஆகியோர் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் (32 ரன்கள்), தீப்தி ஷர்மா (25 ரன்கள்), ரிச்சா கோஷ்* (35 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 247 ரன்களை எடுத்தது.
பாகிஸ்தான் தரப்பில் டயானா பாய்ஜி 4 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் சித்ரா அமீனும் (81 ரன்கள்), நடாலியா பெர்வைஷுமே (33 ரன்கள்) நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மற்ற வீராங்கனைகள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால், அந்த அணி 43 ஓவர்களிலேயே 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் தீப்தி ஷ்ர்மா மற்றும் கிரனதி கவுத் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இந்தத் தொடரில் இந்திய அணி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.