IND vs PAK போட்டி| கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரிச்சா கோஸ்.. 247 ரன்கள் சேர்த்த இந்தியா!
2025 மகளிர் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 247 ரன்கள் அடித்தது இந்தியா.
2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30-ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 2 வரை நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் கோப்பைக்காக மோதுகின்றன.
இந்தியா மற்றும் இலங்கையில் போட்டிகள் நடைபெற உள்ளநிலையில், இந்திய அணி முதல் உலகக்கோப்பையை வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்த இந்திய அணி, தங்களுடைய 2வது போட்டியில் இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடிவருகிறது.
247 ரன்கள் அடித்த இந்தியா..
இலங்கை கொழும்புவில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களான ஸ்மிருதி மற்றும் பிரதிகா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் அதற்குபிறகு பந்துவீச்சில் ரன்களை விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக வீசிய பாகிஸ்தான் பவுலர்கள் தொடக்க ஜோடி இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றினர்.
3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் மற்றும் ஹர்லீன் தியோல் இருவரும் நிதானமாக விளையாடி நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஹர்மன் 19 ரன்னில் வெளியேற, 4 பவுண்டரிகள் 1 சிக்சர்களுடன் 46 ரன்னிலிருந்த ஹர்லீனை ரமீன் அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார்.
அடுத்தவந்த வீரர்கள் யாரும் சோபிக்காத நிலையில் 203 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி நேரத்தில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஸ் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 20 பந்தில் 35 ரன்கள் அடித்து அசத்தினார். அவருடைய கடைசிநேர ஆட்டம் இந்தியாவை 247 ரன்கள் என்ற போராடக்கூடிய டோட்டலுக்கு அழைத்துச்சென்றது.
248 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிவரும் பாகிஸ்தான் மகளிர் அணி 30/3 என விளையாடிவருகிறது.