அரைநூற்றாண்டு உலகக்கோப்பை வரலாறு! புதிய சரித்திரம் படைக்க காத்திருக்கும் இந்திய மகளிர் அணி!
அரைநூற்றாண்டு மகளிர் உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் இருக்கிறது இந்திய மகளிர் படை. இந்த தருணத்தில் இந்த மகளிர் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வரலாற்றின் சில பக்ககங்களை புரட்டலாம் இந்நேரம் ...
1988இல் ஸ்பான்சர்கள்கூட கிடைக்கப் பெறாமல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு கலந்துகொள்ள முடியாமல் போன வரலாறுதான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடையது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிக்கு போதிய பணமில்லாத காரணத்தால் பங்கேற்பதில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது இந்திய விளையாட்டு அமைச்சகம். அன்றைக்கு பள்ளத்தில் இருந்த மகளிர் கிரிக்கெட் இன்றைக்கு ஆடவர் கிரிக்கெட்டுக்கு நிகராக வளர்ச்சி கண்டிருக்கிறது, ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது. பாலின சமத்துவத்தை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்னுறுத்தி வெற்றி கண்டிருக்கிறது.
வெற்றி வீராங்கனைகளை சமூக வலைத்தளங்கள் கொண்டாடித் தீர்க்கின்றன. 1973-ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 12 உலகக்கோப்பை போட்டிகள் நடந்திருந்தாலும், இந்திய அணி 10 தொடர்களிலேயே பங்கேற்றிருக்கிறது. 1973ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக்கோப்பை போட்டிக்கு அணியே இல்லாமல் இருந்த நிலை மாறி, வர்த்தகரீதியிலான டபிள்யு.பி.எல் போட்டிகளை நடத்தும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது மகளிர் கிரிக்கெட். டயானா ஈடுல்ஜி, சாந்தா ரங்கசாமி, பிரமிளா பட், ஜுலன் கோஸ்வாமி, மிதாலி ராஜ் என சில கேப்டன்களை கண்டிருக்கிறது இந்திய அணி.
2005-ஆம் ஆண்டும், 2017ஆம் ஆண்டும் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. அந்த இரண்டு முறையும் கேப்டன் பொறுப்பில் இருந்த மிதாலி ராஜ்க்கு கோப்பை எட்டவில்லை. 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியுற்றது. 2017-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியிடம் போராடி வெற்றி வாய்ப்பை இழந்தது. அப்போது அவர்கள் அவர்கள் யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு பஞ்சாப் நாயகி ஹர்மன்ப்ரீத் கவுர் கையில் கிடைத்திருக்கிறது. இப்போது இங்கிலாந்தோ, ஆஸ்திரேலியாவோ இறுதிப்போட்டியில் இல்லை. மாறாக, முதன்முறை இறுதிப்போட்டியை பார்க்கிறது தென்னாப்பிரிக்க அணி.
முந்தைய உலகக்கோப்பையிலும் கேப்டன் பொறுப்பு வகித்த ஹர்மன்ப்ரீத், அணியை அரையிறுதிக்கு அழைத்துச் செல்லவில்லை. ஆனாலும் இந்த முறை பொங்கியெழுந்து அணித் திறனை வெளிப்படுத்தச் செய்திருக்கிறார். இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உறுதியாக இருக்கிறார் ஹர்மன்ப்ரித் கவுர். அவரின் தனித்துவம் மிகுந்த தலைமை ஆற்றல், பேட்டிங், பந்துவீச்சு, ஆல்ரவுண்ட் என முப்பரிமாணத்தில் காட்சியளிக்கும் இந்திய மகளிர் அணியினர், வரலாற்று முத்தத்தையும், முத்திரையையும் உலகக்கோப்பையின் மீது பதிக்கக் காத்திருக்கின்றனர்.

