மகளிர் உலகக்கோப்பை | ஷஃபாலி, தீப்தி அதிரடி.. தென்னாப்பிரிக்கா அணிக்கு 299 ரன்கள் இலக்கு!
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு, இந்திய அணி 299 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
8 அணிகள் பங்கேற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இறுதிப்போட்டிக்கு இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் முன்னேறின. இந்தியா, தென்னாப்பிரிக்கா என இரு அணிகளும் முதல்முறையாக உலகக் கோப்பையை முத்தமிட முயலும் என்பதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், சொந்த மண்ணில் விளையாடுவது, இந்திய அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று மாலை 3 மணிக்கு தொடங்கவிருந்த இறுதிப்போட்டி, மழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்க அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீராங்கனைகளாக துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் களமிறங்கினர். முதல் ஓவரை எதிர்கொண்ட மந்தனா, மெய்டனாக்கியதுடன் ஆட்டத்தில் பொறுமையைக் கடைப்பிடித்தார். அதேநேரத்தில், கடந்த போட்டியில் ஏமாற்றிய ஷபாலி இறுதிப்போட்டியில் கொஞ்சமும் பயமின்றி, அதிரடி காட்டினார். ஸ்மிருதி நிதானத்தைக் கடைப்பிடிக்க, மறுபுறம் அதிரடியில் கலக்கிய ஷபாலி மூலம் இந்தியாவின் ரன் ரேட் உயர்ந்தபடியே இருந்தது.
இதனால், இந்திய அணி எப்படியும் 300 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்மிருதி 45 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறிய நிலையில், கடந்த போட்டியில் சதம் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற பெருமைக்குரிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் களம் புகுந்தார். அவர் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஜெமிமா வந்தபிறகும் அதிரடியைச் சற்றும் குறைக்காத ஷபாலி, தொடர்ந்து பவுண்டரியும் சிக்ஸரும் அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.
இறுதியில், அவர் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஜெமிமா 20 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்ப்ரித் ஹவுர் 20 ரன்களிலும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்களைப் பறிகொடுத்தனர். பின்னர் களமிறங்கிய தீப்தி சர்மா நிதானமான ஆட்டத்தைக் கடைப்பிடித்தவுடன் அவ்வப்போது பந்துகளை பவுண்டரிக்கும் விரட்டினார். இறுதியில் அவர் 58 ரன்கள் எடுத்ததன் வாயிலாக இந்தியாவும் 298 ரன்கள் எடுக்க வழிவகுத்தார். அவருக்குத் துணையாகக் கடைசிக்கட்டத்தில் அதிரடி சிக்ஸர்களைப் பறக்கவிட்ட ரிச்சா கோஷும் 34 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் காகா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

