மகளிர் டி20 உலகக்கோப்பை | இந்தியா - பாகிஸ்தான் ஜூன் 14 மோதல்!
மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளதுடன், ஜூன் 14ஆம் தேதி இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் ஐசிசி சார்பில் உலகக்கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின், 10ஆவது சீசன் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை நடைபெறவுள்ள இத்தொடரில், மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன. அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளன.
பி பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த மாதம் நேபாளத்தில் நடந்த ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம் வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் இத்தொடருக்குள் நுழைந்துள்ளன. ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் தொடக்கப் போட்டியில் இங்கிலாந்து இலங்கையை எதிர்கொள்கிறது. ஐசிசி அறிவித்த அட்டவணைப்படி, இந்தியா பரம எதிரியான பாகிஸ்தானை ஜூன் 14ஆம் தேதி எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி ஜூலை 5ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

