W T20 World Cup | இன்னும் 4 தேவை.. 10 அணிகள் மோதல்.. ஜன.14 தகுதிச் சுற்று ஆரம்பம்!
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச் சுற்று நேபாளத்தில் வரும் 14ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் 4 அணிகளைத் தேர்வு செய்ய 10 அணிகள் மோதுகின்றன.
இங்கிலாந்து மற்றும வேல்ஸில் ஜூன்-ஜூலை மாதங்களில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. ஏற்கெனவே 6 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், மேலும் 4 அணிகள் தேர்வு செய்யப்பட இருக்கின்றன. இதற்கான தகுதிச் சுற்று நேபாளத்தில் வரும் 14ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த தகுதிச் சுற்றுத் தொடரில் 10 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. அதன்படி, ஏ பிரிவில் வங்கதேசம், அயர்லாந்து, நமீபியா, பபூவா நியூ கினியா, அமெரிக்கா ஆகிய அணிகளும் பி பிரிவில் நேபாளம், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, தாய்லாந்து, ஜிம்பாப்வே அணிகளும் இடம்பிடித்துள்ளன.
10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்த அணிகள் அதே பிரிவில் இடம்பிடித்துள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் மூன்று இடங்களில் பிடிக்கும் அணி சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 6 பிரிவில் 6 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பைத் தொடருக்கான முதன்மைச் சுற்றுக்கு இடம் பெறும். ஜனவரி 14 முதல், தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னதாக அணிகளுக்கு மொத்தம் 10 பயிற்சி போட்டிகளும் நடைபெற இருக்கின்றன.

