மகளிர் ஆசிய கோப்பை | மீண்டும் ஒரு பைனலில் INDvsPAK..? அரையிறுதியில் யார்? யார்? மோதல்?
2026 மகளிர் ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. தோல்வியறியாத இந்தியா நாளை துபாயில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 ஆசிய அணிகள் பங்கேற்று விளையாடும் 2026 மகளிர் ஆசிய கோப்பை தொடர் அரையிறுதிப்போட்டிகளை எட்டியுள்ளது. துபாயில் நடந்துவரும் தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ள இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.
தோல்வியே காணாமல் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்ற நிலையில், ஹாங்காங் உடன் வெற்றிபெற்றே ஆகவேண்டிய போட்டியில் 71 ரன்களுக்கு ஹாங்காங்கை சுருட்டிய பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.
அதேபோல வங்கதேசம் மற்றும் யுஏஇ அணிகள் மோதிய கடைசி லீக் போட்டியில் 103 ரன்கள் அடித்தபோதும் யுஏஇ அணியை 69 ரன்களுக்கு கட்டுப்படுத்திய வங்கதேசம் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. மறுமுனையில் இந்தியாவை போல தோல்வியே காணாத இலங்கை அணியும் அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. அதேபோல செப்டம்பர் 11 அன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதன்மூலம் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் ஒருமுறை இறுதிப்போட்டியில் மோதும் வாய்ப்பு உருவாகியுள்ளது. லீக் போட்டியில் இந்தியாவிடம் வரலாற்று தோல்வியை பாகிஸ்தான் சந்தித்தபோது, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் வாஹப் ரியாஸ் பாகிஸ்தான் அணியே ஆசியக்கோப்பையை வெல்லும் என கூறியிருந்தார். இந்தசூழலில் இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் மோதும் பட்சத்தில் அப்போட்டி சுவாரசியமானதாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

