\
wahab riaz
wahab riazai

இந்தியாவை விட பாகிஸ்தானே சிறந்த அணி.. 55 AllOut-க்கு பின் சவால்!

நேற்று நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான மகளிர் ஆசிய கோப்பை போட்டியில் 55 ரன்னுக்கு சுருண்டு மண்ணைக்கவ்விய போதும், பாகிஸ்தான் அணியே சிறந்த அணி என்று அவ்வணியின் தலைமை பயிற்சியாளர் வாஹப் ரியாஸ் சவால் விட்டுள்ளார்..
Published on
Summary

மகளிர் ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதலில், பாகிஸ்தான் 55 ரன்களுக்கு சரிந்து தங்களது குறைந்த டி20 ஸ்கோர் சாதனையை புதுப்பித்தது. இந்தியா எளிதில் இலக்கை துரத்தி வெற்றி பெற்றது. இந்திய பந்துவீச்சில் ஸ்ரீ சரணி, ப்ரேமா ராவத் சிறப்பித்தனர். ஹர்மன்ப்ரீத் 150வது டி20 கேப்டன்சி போட்டியை நிறைவு செய்தார். இருந்தும் ஆசியக் கோப்பையை வெல்ல பாகிஸ்தான்தான் சிறந்த அணி என வாஹப் ரியாஸ் சவால் விடுத்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், யுஏஇ, தாய்லாந்து, ஹாங் ஹாங்-சீனா, இந்தோனேசியா முதலிய 8 அணிகள் அடங்கிய மகளிர் ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்டு 28ஆம் தேதிமுதல் நடைபெற்றுவருகிறது.

இந்தசூழலில் துபாயில் நேற்று நடந்த 9வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், இந்தியாவின் தரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 55 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியில் தனிநபர் ஸ்கோராக வெறும் 14 ரன்களே பதிவாகின.

indw vs pakw
indw vs pakwbcci

சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்ரீ சரணி 4 ஓவரில் 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ப்ரேமா ராவத் 4 ஓவரில் 9 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

56 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணி 52 பந்தில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 போட்டிகளில் கேப்டன்சி செய்த முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் படைத்தார்.

அதேநேரம் பாகிஸ்தான் மகளிர் அணி அவர்களுடைய டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகைக்குறைவான டோட்டலை பதிவுசெய்து மோசமான சாதனை படைத்தது. இதற்கு முந்தைய அவர்களது குறைவான ஸ்கோர் 56ஆக இருந்த நிலையில், இந்தியாவிற்கு எதிராக 55 ரன்னுக்கு சுருண்டு மோசமான ரெக்கார்டை பதிவுசெய்தது.

wahab riaz
wahab riazai

ஆனால் இப்படி ஒரு வரலாற்று தோல்விக்கு பிறகும் இந்தியாவை விட பாகிஸ்தானே சிறந்த அணி என அவ்வணியின் தலைமை பயிற்சியாளர் வாஹப் ரியாஸ் பேசியுள்ளார். போட்டிக்கு பிறகு பேசியிருக்கும் அவர், ‘எங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் மிகவும் திறமையானவர்கள், அவர்கள் தங்களைத் தாங்களே நம்ப வேண்டும். இந்த ஆசியக் கோப்பையை வெல்ல பாகிஸ்தான்தான் சிறந்த அணி என்று நான் இன்னும் நம்புகிறேன், ஏனென்றால் இங்குள்ள சூழ்நிலைகள் மற்ற அணிகளை விட எங்களுக்குதான் மிகவும் சாதகமாக உள்ளன. அடுத்தப்போட்டியில் வென்று அரையிறுதிக்கு தகுதிபெறுவோம்’ என இந்திய அணிக்கு சவால் விடும் வகையில் பேசினார்.

ஆனால் சோகம் என்னவென்றால் அடுத்தப்போட்டியில் ஹாங்காங்கிடம் தோற்றால், பாகிஸ்தான் அணி இதுவரை இல்லாத மோசமான வகையில் தொடரிலிருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com