வெறும் 55 ரன்களுக்கு ஆல்அவுட்.. பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா! PAK-க்கு மாபெரும் தோல்வி!
ஆகஸ்ட் 28 முதல் நடைபெறும் மகளிர் ஆசிய கோப்பையில் இந்தியா–பாகிஸ்தான் மோதலில், பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 55 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஸ்ரீ சரணி, ப்ரேமா ராவத் தலா 3 விக்கெட்டுகள் எடுத்து பாகிஸ்தானை சுருட்டினர். 56 ரன்கள் இலக்கை இந்தியா எளிதில் துரத்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், யுஏஇ, தாய்லாந்து, ஹாங் ஹாங்-சீனா, இந்தோனேசியா முதலிய 8 அணிகள் அடங்கிய மகளிர் ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்டு 28ஆம் தேதிமுதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 9வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 55 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியில் தனிநபர் ஸ்கோராக 14 ரன்களே பதிவாகின.
சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்ரீ சரணி 4 ஓவரில் 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள், ப்ரேமா ராவத் 4 ஓவரில் 9 ரன்னுக்கு 3 விக்கெட்டுகள் என அசத்தினர்.
56 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணி 52 பந்தில் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது. இப்போட்டியில் மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 போட்டிகளில் கேப்டன்சி செய்த முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் படைத்தார்.
அதேநேரத்தில் பாகிஸ்தான் அவர்களுடைய டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகைக்குறைவான டோட்டலை பதிவுசெய்து மோசமான சாதனை படைத்தது. இதற்கு முந்தைய அவர்களது குறைவான ஸ்கோர் 56ஆக இருந்த நிலையில், இந்தியாவிற்கு எதிராக 55 ரன்னுக்கு சுருண்டு மோசமான ரெக்கார்டை பதிவுசெய்துள்ளது.

