\
Longest Bowling Run-up
Longest Bowling Run-upweb

ஒரு பந்தை வீச 100 கிமீ ஓடிய வீரர்.. 14 மணிநேரம் நிற்காத கால்கள்! மிக நீண்ட Bowling Run-Up!

கிரிக்கெட் வரலாற்றில் மிக நீண்ட தூர பவுலிங் ரன்னப்பாக 100 கிமீ தூரத்தை கடந்து முதல் பந்தை வீசியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஒருவர்..
Published on
Summary

கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகள் படைக்கப்படுகின்றன, ஆனால் சில சாதனைகள் என்றென்றும் சிறப்பு வாய்ந்தவையாக நிலைத்து நிற்கின்றன. அப்படியான ஒரு சாதனையை தான் சமீபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் ஒருவர் படைத்துள்ளார். அவர் கிரிக்கெட் வரலாற்றில் மிக நீண்ட பவுலிங் ரன்னப்பை நிறைவுசெய்துள்ளார். ஒரு பந்தை வீச 100 கிமீ தூரம் எடுத்துக்கொண்ட அவர், அதன் தொடர்ச்சியாக ஒரு கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தை வீசினார்.

இங்கிலாந்தின் சர்ரேவைச் சேர்ந்த சாம் போடோனோ என்ற இளம் வீரர், ஆண்களுக்கான மிக நீண்ட ரன்-அப் கின்னஸ் உலக சாதனையை முறியடிப்பதற்காக, சமீபத்தில் வடக்கு லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்திலிருந்து வோக்கிங்கில் உள்ள வேல்லி எண்ட் கிரிக்கெட் கிளப்பிற்கும் இடையிலான 100 கி.மீ தூரத்தை 14 மணி நேரத்தில் ஓடி, ஒரு போட்டியின் முதல் பந்தை வீசினார்.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவில், கிரிக்கெட் விளையாட்டின் வெள்ளை ஜெர்சியை அணிந்துகொண்ட அவர், கையில் ஒரு கிரிக்கெட் பந்துடன் தனது பந்துவீச்சு ஓட்டத்தைத் தொடங்கினார். ஓடியே பதினான்கு மணி நேரம் பயணித்து 100 கி.மீ தூரத்தை கடந்த அவர், ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்துசேர்ந்தார். அங்கு நடந்த கிரிக்கெட் போட்டிக்கான முதல்பந்தை வீசி ஓவரை முடிவுசெய்தார். அவருடைய இந்த முயற்சி ஒரு சாதாரண பந்துவீச்சு ஓட்டமாக இருக்க வேண்டியதை அல்ட்ரா-மாரத்தானாக மாற்றி சாதனையாக்கியது.

இந்த நீண்ட தூர பவுலிங் ரன்னப்பை ஒரு புற்றுநோய் தொண்டு நிறுவனத்திற்காகவே போடோனோ செய்துள்ளார். இதன்மூலம் அவர் 8 லட்சம் ரூபாய் தொகையை திரட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கினார். இந்த தொண்டு நிறுவனம் அரிய வகை நுரையீரல் புற்றுநோயுடன் போராடி 46 வயதில் உயிரிழந்த தனது மனைவிக்காக இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் நிறுவிய 'The Ruth Strauss Foundation' என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் கடந்த 2024ஆம் ஆண்டு 24 கிமீ தூரம் பவுலிங் ரன்னப்பை பதிவுசெய்து சாதனை படைத்த டாம் டன்னை பின்னுக்குதள்ளியுள்ளார் போடோனோ. மேலும் இந்த அரிய சாதனையை கின்னஸ் ரெக்கார்டாக பதிவுசெய்யவும் கோரிக்கை விடுத்துள்ள போடோனா, சரிபார்ப்புக்குப் பிறகு கின்னஸ் உலகக் கோப்பை சாதனைகள் அமைப்பு ஒப்புதல் அளித்தால், அந்தச் சாதனையின் பெருமைக்குரிய நபராகவும் மாறுவார்.

Longest Bowling Run-up
உங்களுக்காக என்ன செய்துவிட்டார் தோனி? Raina பதிலால் நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com