யாரை எதிர்த்து, யாருடன் சேர்ந்து விளையாட ஆசை..? 2-க்கும் இந்திய வீரரை சொன்ன வாசிம் அக்ரம்!
பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம், தற்போதைய காலத்தில் யாருடன் விளையாட விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, இந்திய வீரரை தேர்வுசெய்துள்ளார். அவரது பதில் இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சு சாம்பவான் வாசிம் அக்ரம், எக்காலத்திலும் சிறந்த பவுலர்களில் ஒருவராக கொண்டாடப்படுபவர். ஒருநாள் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலர் மற்றும் ஒரே வேகப்பந்துவீச்சாளர், டெஸ்ட் (414) மற்றும் ODI (502) ஆகிய இரண்டு வடிவங்களிலும் தலா 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய முதல் சர்வதேச பந்துவீச்சாளர், ஒட்டுமொத்த List A உள்நாட்டுப் போட்டிகளில் 881 விக்கெட்டுகள், முதல்தர போட்டிகளில் (First Class) 1,042 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் வாசிம் அக்ரம்.
பந்துவீச்சு மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் பல நட்சத்திர பேட்ஸ்மேன்களே செய்யாத சம்பவம் எல்லாம் செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் ஆட்டமிழக்காமல் 257 ரன்களாகும். 1996-ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 8வது இடத்தில் களமிறங்கி இந்த இமாலய ரன்களை குவித்திருந்தார். டெஸ்ட் வரலாற்றில் 8-வது வரிசையில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ரன் இதுவே ஆகும். அந்தப்போட்டியில் 12 சிக்சர்களை விளாசிய அவர் அப்போதைய உலகசாதனையை படைத்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக (4) ஹாட்ரிக் விக்கெட்டுகள், ஐசிசி ஹால் ஆஃப் பிரேமில் இடம்பிடித்தவர், 1223 புள்ளி மதிப்பீட்டுடன் உலகத்தின் தலைசிறந்த ஒருநாள் பவுலராக விஸ்டனால் அறிவிக்கப்பட்டவர் என எண்ணிலடங்காத சாதனைகளை தன்வசம் வைத்துள்ளவர் வாசிம் அக்ரம்.
இப்படியான லெகஸியை வைத்திருக்கும் வாசிம் அக்ரம், பல நேரங்களில் இந்திய வீரர்களை புகழ்ந்து பேசியுள்ளார். கோலி, ரோகித், பும்ரா மட்டுமல்ல சிராஜை கூட அவர் பாகுபாடு இல்லாமல் பாராட்டிப்பேசியுள்ளார். இந்தசூழலில் தான் சமூகவலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோவில், வாசிம் அக்ரமிடம் தற்போதைய கால கிரிக்கெட்டர்களில் யாருக்கு எதிராகவும், யாருடன் சேர்ந்தும் விளையாட விரும்புகிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “இன்றைய தலைமுறையில், நான் யாருடன் விளையாட வேண்டும், யாருக்கு எதிராக விளையாட வேண்டும் என்றெல்லாம் பார்த்தால், நான் நிச்சயமாக விராட் கோலியைத்தான் தேர்ந்தெடுப்பேன்” என பதிலளித்துள்ளார். அவருடைய இந்த பதிலை இந்திய ரசிகர்கள் அதிகம் பரப்பி வருகின்றனர்.

