IPL-ல் வரிசையாக அதிக தோல்விகளை சந்தித்த அணி எது..? பட்டியலில் 3 அணிகள்!
2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற 13 கோப்பை சாம்பியன்கள் புள்ளிப்பட்டியலில் அடித்தளத்தில் திணறுகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளாக கோப்பை இல்லாத மும்பை, தோனி பிந்தைய சிஎஸ்கே, ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறிய பிந்தைய கேகேஆர் ஆகிய அணிகளின் வீழ்ச்சி பேசுபொருளாகும் நிலையில், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியான அதிக தோல்வி சாதனைகள் மீண்டும் கவனத்தை ஈர்க்கின்றன.
2026 ஐபிஎல் தொடரில் 13 கோப்பைகள் வென்ற அணிகளான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலிய 3 அணிகளும் புள்ளிப்பட்டியலில் 8வது, 9வது மற்றும் 10வது இடங்களில் நீடிக்கின்றன.
தொடர் தோல்விகளால் சாம்பியன் அணிகள் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக மும்பை அணி கோப்பை வெல்லாமல் இருந்துவருகிறது. 2024-க்கு பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறிய பின் அவ்வணி படுமோசமாக செயல்பட்டு வருகிறது. 2023-க்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியின் நிலைத்தன்மை இல்லாமல் சொதப்பி வருகிறது.
இந்த 3 அணிகளின் வீழ்ச்சி 2026 ஐபிஎல் தொடரில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக தோல்விகளை கண்ட அணிகள் குறித்து இங்கே பார்க்கலாம்..
தொடர்ச்சியாக அதிகதோல்விகளை கண்ட ஐபிஎல் அணிகள்..
ஐபிஎல்லில் அதிக தோல்விகளை வரிசையாக கண்ட அணிகளாக அதிகபட்ச தோல்விகளுடன் புனே வாரியர்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் இரண்டு அணிகள் முதலிடத்தை பிடித்துள்ளன. 3வது அணியாக 5 முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி நீடிக்கிறது.
1. புனே வாரியர்ஸ் (2012–2013) - 2012 ஐபிஎல் சீசனில் மோசமான தொடர் ஓட்டத்தை கொண்டிருந்த புனே வாரியர்ஸ் அணி கடைசி 9 போட்டிகளை தொடர்ச்சியாக இழந்ததோடு, 2013 தொடரின் தொடக்கத்திலும் 2 போட்டிகளில் தோல்வியை தழுவி வரிசையாக 11 தோல்விகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
2. டெல்லி டேர்டெவில்ஸ் (2014–2015) - புனே வாரியர்ஸை போலவே தற்போதையை டெல்லி கேபிடல்ஸ் அணியும், முந்தைய டெல்லி டேர்டெவில்ஸ் அணியுமான டெல்லி 2014 சீசனின் கடைசி 9 போட்டிகளில் தோல்வியை தழுவியதோடு, 2015 சீசனின் தொடக்கத்திலும் 2 தோல்விகளை சந்தித்து மொத்தம் 11 போட்டிகளில் வரிசையாக தோற்றது.
3. மும்பை இந்தியன்ஸ் (2022) - 2022 ஐபிஎல் தொடரின் முதல் 8 போட்டிகளில் வரிசையாக தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, சீசனின் தொடக்கத்திலேயே நீண்ட தோல்வியை கண்ட ஒரே அணியாக நீடிக்கிறது.

