பேசாம இப்போவே வெளிய போய்டுங்க KKR.. 6 போட்டியில் 0 வெற்றி.. மீண்டும் படுதோல்வி!
ஐபிஎல் தொடரில் 3 முறை கோப்பை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த சீசனில் முழுமையாக சரிந்து 6 போட்டிகளில் ஒரு வெற்றியும் பெறாமல், மழையால் ரத்தான பஞ்சாப் கிங்ஸ் போட்டியிலிருந்து கிடைத்த ஒரே புள்ளியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திணறி வருகிறது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் அனைத்திலும் தோல்வி தொடர்கிறது.
பெஸ்ட் vs பெஸ்ட் என்பது தான் ஐபிஎல் போட்டியை உலகத்தரம் வாய்ந்த டி20 லீக்காக மாற்றுகிறது. ஆனால் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சொதப்பிவரும் 3 முறை கோப்பை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டியில் 0 வெற்றியை மட்டுமே பதிவுசெய்துள்ளது.
அதிலும் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளி அவர்களுக்கு கிடைத்தது. இதுவரை எந்த அணியாலும் வீழ்த்தப்படாமல் இருக்கும் ஒரு அணியாக பஞ்சாப் கிங்ஸ் இருந்துவரும் நிலையில், அவர்களுக்கு எதிரான போட்டியில் ஒரு புள்ளியை பெற்றது KKR-க்கு கிடைத்த ஜாக்பாட் என்றுதான் சொல்லவேண்டும்.
கொல்கத்தா அணிக்கு யாராவது வெற்றியை தேடித்தர மாட்டார்களா என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தாலும், அப்படி எல்லாம் எதிர்ப்பார்க்காதீங்க நாங்க வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கே இல்லை என்பது போல்தான் நைட் ரைடர்ஸ் அணி விளையாடிவருகிறது.
பேட்டிங் இருக்கா..? இல்லையா..?
டாஸ் வெல்ல மாட்டாமோ என பல அணிகள் போராடிவரும் நிலையில், அனைத்து போட்டியிலும் டாஸ் வென்றால் கூட கொல்கத்தா அணியால் வெற்றிபெறமுடியவில்லை. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான மோதலில் டாஸ் வென்ற கொல்த்தா பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது.
ஆனால் எதற்கு பேட்டிங் எடுத்தோம் என்பது போல விளையாடிய கேகேஆர் 32 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் ரஹானே 0 ரன்னுக்கு வெளியேற, கடந்த போட்டிகளில் நன்றாக விளையாடி வந்த ரகுவன்ஷியும் 8 ரன்களுக்கு அவுட்டானார். டிம் சைஃபர்ட்டும் 19 ரன்னுக்கு காலியாக, 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோவ்மன் பவல் மற்றும் கேம்ரூன் க்ரீன் இருவரும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு நம்பிக்கை கொடுத்தனர்.
2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என விளாசிய பவல்லை 27 ரன்னுக்கு வெளியேற்ற அடுத்தவந்த எந்த வீரர்களும் சோபிக்கவில்லை. இறுதிவரை களத்தில் நின்று போராடிய கேம்ரூன் க்ரீன் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 79 அடிக்க 20 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்த கொல்கத்தா 180 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
கில் அதிரடி ஆட்டம்.. GTஅசத்தல் வெற்றி..!
181 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய குஜராத் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில், நிலைத்து நின்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 8 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என துவம்சம் செய்த அவர் 86 ரன்களை குவிக்க, மற்ற பேட்டர்களின் கேமியோவால் இலக்கை எட்டிய டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது. இதன்மூலம் 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது டைட்டன்ஸ் அணி.
ஹாட்ரிக் தோல்விகளை பெற்றிருக்கும் கேகேஆர் அணி 6 போட்டியில் 5 தோல்வி ஒரு ரத்து என 0 வெற்றி மற்றும் 1 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் நீடிக்கிறது.

