‘வயசானாலும் உங்க ஆட்டம் போகல..’ Eng. மண்ணில் மிரட்டிய விராட், ரோகித்.. இனிமேல் ஆடுவது எப்போது?
இங்கிலாந்து ஒருநாள் தொடரில் மிரட்டிய இந்திய அணியின் ஜாம்பவான்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் அடுத்து எப்போது விளையாடப் போகிறார்கள். அடுத்துகுறித்து விவரிக்கிறது இந்தக் கட்டுரை..
இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் முன்னாள் கேப்டன்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இடம்பெற்றிருந்தனர். இத்தொடரில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா தொடரை இழந்தது. எனினும், அனுபவசாலிகளும் நட்சத்திர வீரர்களுமான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இளம் வீரர்களைவிட சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தனர். தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி சொதப்பியபோதும், அடுத்த இரண்டு போட்டிகளிலும் அரைசதங்கள் அடித்து தமது திறமையை நிரூபித்தார். அதேபோல், முதல் இரண்டு போட்டிகளில் ஹிட்மேன் ரோகித் சர்மா சொதப்பிய நிலையில், அவர் ஓய்வுபெற இருப்பதாகவும், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 3ஆவது போட்டியே அவர் விளையாடும் கடைசிப் போட்டி எனத் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், இதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தது. இந்தச் சூழலில்தான் ரோகித் சர்மா, அந்த 3ஆவது போட்டியில் சதமடித்து அனைவரையும் வியக்கவைத்தார். தவிர, விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அவர், அந்தப் போட்டியில், 110 பந்துகளில் 17 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 138 ரன்கள் குவித்தார். மேலும், தன்னுடைய 34ஆவது ஒருநாள் சதத்தை பதிவுசெய்த அவர், இங்கிலாந்து மண்ணில் 8ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.
மேலும், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரராக ரோகித் சர்மா வரலாறு படைத்தார். இதனால், ரசிகர்கள் ‘வயசானாலும் உங்க ஆட்டம் போகல..’எனப் புகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா தனது அடுத்த ஒருநாள் போட்டியை செப்டம்பர் கடைசி வாரத்தில் விளையாட உள்ளது. இதனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்த இரண்டு மாதங்களுக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாடமாட்டார்கள். செப்டம்பர் 27 அன்று தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட உள்நாட்டு ஒருநாள் தொடரின் மூலம் அவர்கள் மீண்டும் களமிறங்க உள்ளனர்.

