’விமர்சனங்களுக்கு சாட்டை அடி..’ இங்கிலாந்து மண்ணில் 8வது ODI சதமடித்தார் ரோகித் சர்மா!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக சதம் அடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். முதல் இரண்டு போட்டிகளில் குறைந்த ரன்கள் காரணமாக நீக்கம், ஓய்வு வதந்திகள் கிளம்பிய நிலையில், 12 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 34வது ODI சதம், இங்கிலாந்து மண்ணில் 8வது சதம் பதிவு செய்து மீண்டும் தன் திறனை நிரூபித்தார்.
இந்திய கிரிக்கெட்டின் ‘ஹிட் மேன்’ என அழைக்கப்படும் ரோஹித் சர்மா எண்ணற்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரராக விளங்குகிறார். தவிர, உலகக்கோப்பையை வென்று தந்த கேப்டன்கள் வரிசையிலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். உலகக்கோப்பை வென்று தந்ததற்குப் பிறகு, அவர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதேநேரத்தில், அடுத்த உலகக்கோப்பைக்குக் கவனம் செலுத்தும் நோக்கில், ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்திவந்தார்.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ள ரோகித் சர்மா, முதல் இரண்டு போட்டிகளிலும் பெரிய அளவில் ரன்களைக் குவிக்கவில்லை. இதனால் ரோகித் சர்மா இந்திய அணியிலிருந்து நீக்கப்படவிருக்கிறார், விரைவில் ஓய்வை அறிவிப்பார் என வதந்திகள் பரவின.
இந்தசூழலில் தான் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அதிரடியாக சதம் விளாசி தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ரோகித் சர்மா.
முதல் இந்திய வீரராக சாதனை..
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா, 12 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என பறக்கவிட்டு 34வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்தார்.
அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்து மண்ணில் 8வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்து மிரட்டினார். மேலும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரராக ரோகித் சர்மா வரலாறு படைத்தார்.

