மகளிர் உலகக் கோப்பையைத் தொடாத பிரதமர் மோடி.. விமர்சிக்கும் இணையவாசிகள்.. பின்னணிக் காரணம் என்ன?
‘பிரதமர் மோடி மகளிர் உலகக் கோப்பையைத் தொடவே இல்லை’ என இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி முதல்முறையாக உலகக்கோப்பை வென்று வரலாறு படைத்துள்ளது இந்திய மகளிர் அணி. இதன்மூலம் 47 ஆண்டுகால இந்திய மகளிர் அணியின் ஏக்கம் தணிந்து, கனவு நிறைவேறியுள்ளது. இதையடுத்து, உலகம் முழுவதும் இந்திய அணிக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், உலகக் கோப்பையை வென்று தந்த இந்திய மகளிர் அணியினர் நேற்று, பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, பிரதமர் மோடியிடம் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும் உலகக் கோப்பையைக் காட்டினர். இத்தகைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த இணையவாசிகள், ‘பிரதமர் மோடி அந்த உலகக் கோப்பையைத் தொடவே இல்லை’ என விமர்சித்து வருகின்றனர். தவிர, ‘ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையைக் கொண்டு வந்தபோதுகூட, பிரதமர் மோடி தொட்டார். ஆனால், இதைத் தொடவில்லை’ என அவர்கள் மேலும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி, இரண்டு உலகக் கோப்பைகளையுமே தொடவில்லை என்றே கூறப்படுகிறது. அப்போதும், ரோகித் மற்றும் டிராவிட்டின் கைகளையே அவர் பிடித்துள்ளார். கோப்பையை அவர் தொடவில்லை என்பதை புகைப்படங்களே நிரூபிக்கின்றன. அதேபோல்தான், மகளிர் உலகக் கோப்பையையும் அவர் தொடவே இல்லை.
ஆனால் பிரதமர் மோடி, இந்த இரண்டு உலகக் கோப்பைகளையும் தொடாததற்குப் பின்னால் ஒரு சிறப்புக் காரணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. உண்மையில், சாம்பியன்கள் மட்டுமே உலகக் கோப்பையை வைத்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த பாரம்பரியம், வீரர்களின் சாதனைகளை மதிக்கிறது. இந்த பாரம்பரியத்தைப் பின்பற்றியே, பிரதமர் மோடியும் கோப்பையைத் தொடுவதைத் தவிர்த்து, வீரர்களுக்கு முழுப் பெருமையையும் வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. எனினும், நாட்டின் பிரதமருக்கும் உலகக் கோப்பையைத் தொட உரிமை உண்டு என்றாலும், வீரர்களை கௌரவிக்கும்விதமாக பிரதமர் மோடி கோப்பையைத் தொடவில்லை. 2023ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணி, 6வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.
அப்போது, அந்த அணியின் வீரர்கள் அனைவரும் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதில் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ், கோப்பையின் மீது கால் வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானதுடன், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
கோப்பையை மதிக்கத் தெரியாதவர்கள் கையில் கோப்பை கிடைத்ததாக விமர்சனங்களும் வைக்கப்பட்டன. ஆனால், அதை இந்தியா எந்தளவுக்கு மதிக்கிறது என்பதற்கு நமது வீரர்கள் மட்டுமல்லாது, பிரதமரும் உதாரணமாகி உள்ளார் என்கின்றனர், விவரமறிந்தவர்கள். ஆம், அதைப் பெறுவதற்கும் வைத்திருப்பதற்கும் கேப்டன்கள் மற்றும் வீரர்களுக்கே உரிமை உண்டு என்பதை உணர்ந்தே, பிரதமர் மோடி, அதைத் தொட்டுக்கூடப் பார்க்காமல் பெருந்தன்மையாக விட்டுள்ளார் என்கின்றனர், அவர்கள்.

