’கவாஜா சொல்வது 100% சதவீதம் உண்மை..’ மௌனத்தை உடைத்த டேவிட் வார்னர்!
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மூன்று வீரர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டது தவறு என உஸ்மான் கவாஜா கூறியுள்ளார். டேவிட் வார்னர் இதை ஆதரித்து, உண்மையை வெளிப்படுத்தியதற்காக கவாஜாவுக்கு நன்றி தெரிவித்தார். இந்த விவகாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மேலாண்மையையும் மற்ற வீரர்களையும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது. அப்போது கேப் டவுனில் நடந்த தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் பந்தை திட்டமிட்டு சேதப்படுத்திய சம்பவம் கிரிக்கெட் உலகை அதிரச் செய்தது.
பந்தின் ஒரு பக்கத்தை சொரசொரப்பாக்கி ரிவர்ஸ் ஸ்விங்வரவழைக்க திட்டமிட்டு இளம் ஆஸ்திரேலிய வீரரான கேமரூன் பேன்கிராப்ட் (Cameron Bancroft), மஞ்சள் நிற உப்புத்தாளை (Sandpaper) பயன்படுத்தி பந்தை தேய்த்தார். இது கேமராவில் சிக்கிய நிலையில் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிமுறை படி இது கடுமையான குற்றம் என்பதால் இதில் ஈடுபட்ட இளம் வீரர் பேன்கிராப்ட்க்கு 9 மாதங்கள் கிரிக்கெட் விளையாடத் தடைவிதிக்கப்பட்டது. கேப்டன் ஸ்மித்க்கு 12 மாதங்கள் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடத் தடை விதிக்கப்பட்ட நிலையில், 2 ஆண்டுகள் கேப்டன் பதவி வகிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
அதேபோல, துணை கேப்டன் டேவிட் வார்னருக்கும் 12 மாதங்கள் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியை வகிக்க தடை விதிக்கப்பட்டது.
புதிய புயலை கிளப்பிய காவாஜா!
இந்த நிலையில், அப்போது அணியில் இடம்பெற்றிருந்த மூத்த வீரர் உஸ்மான் கவாஜா (khawaja ) தனது 'சப்ர்' (Sabr) என்ற சுயசரிதை நூலில் இந்த சம்பவத்தில் முழு ஆஸ்திரேலியா அணியும் ஈடுபட்டது என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
சான்ட்பேப்பர் மூலம் பந்து சேதப்படுத்தும் சதித்திட்டம் ஆஸ்திரேலிய அணியில் இருந்த வீரர்கள் அனைவருக்கும் தெரிந்தே நடந்தது என்றும், அது நாங்கள் அனைவரும் இணைந்து செய்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போதே பேன்கிராப்ட் சான்ட்பேப்பரைப் பயன்படுத்தினார் என்றும், மூன்றாவது டெஸ்டில் அவர் கேமராவில் பிடிபட்டார் என்றும் கவாஜா வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்திற்குப் பிறகு ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பேன்கிராப்ட் ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே பலியாடாக மாற்றப்பட்டுத் தண்டனை பெற்றனர் என்றும், அணி நிர்வாகமும் மற்ற வீரர்களும் இதற்கான கூட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கவாஜா வெளிப்படுத்திய விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கும் நிலையில், வார்னர், ஸ்மித் மட்டுமில்லாமல் அப்போது அணியில் இருந்த மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh), பாட் கம்மின்ஸ் (Pat Cummins), மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc), நாதன் லயன் (Nathan Lyon), ஜோஷ் ஹேசில்வுட் (Josh Hazlewood) ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
கவாஜா சொன்னது 100% சரியானது!
இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் டேவிட் வார்னர், "உண்மையை" வெளிப்படுத்தியதற்காக காவாஜாவுக்கு நன்றி தெரிவித்ததோடு, காவாஜாவின் இந்த வெளிப்படுத்தல்கள் அவரது வரவிருக்கும் சுயசரிதையான ' சப்ர்' நூலை விற்பனை செய்வதற்காகவே என்ற கருத்துக்களையும் நிராகரித்தார்.
அவருடைய வீடியோவில், “உஸ்ஸி, நான் உங்களுக்கு எனது முழு ஆதரவையும் அளிக்கிறேன். நீங்கள் செய்ததற்கு நன்றி. நீங்கள் சொன்னது நூறு சதவீதம் துல்லியமானது. இப்போது அனைவருக்கும் உண்மை தெரிந்துவிட்டது, அது வெளிவந்துவிட்டது.
சம்பவம் குறித்து நேர்காணல் செயல்முறை நடந்தது அவசரமாகவும் கோளாறாகவும் நடத்தப்பட்டது. உஸ்ஸி, கேமரூன் பான்கிராஃப்டுக்கு அருகில் அமர்ந்திருந்தார். ஆனால் உஸ்ஸியிடம் எந்தவித நேர்காணலும் நடத்தப்படவில்லை. இது எப்படி ஒரு முழுமையான விசாரணையாக இருக்க முடியும்? இது எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது.
நாங்கள் இங்கு யாரையும் குற்றம் சாட்டவோ அல்லது எங்கள் காயங்களைக் கிளறவோ வரவில்லை. இது பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, உண்மை முறையாக விசாரிக்கப்படுவதை உறுதி செய்வது பற்றியது. ஒருவேளை, மக்கள் தனிநபரை விமர்சிப்பதையும், பொறுப்புக்கூறலைக் கோருவதையும் நிறுத்திவிட்டு, விசாரணைக்குப் பொறுப்பானவர்களிடம் அதைக் கோரத் தொடங்க வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம்” என பேசியுள்ளார்.
மேலும் அந்த சம்பவத்தை கடப்பது கடினமாக இருந்ததாக கூறிய வார்னர், தன்னுடைய 12 வயது மகள் ஏன் கேமரா முன்னின்று நீங்கள் அழுதுகொண்டிருந்தீர்கள் என்று எழுப்பிய கேள்விக்கு தன்னால் 2 நாட்கள் பேசமுடியவில்லை என்று கூறினார். அதேநேரம் உண்மையை சொல்லிவிடுவதே சரி, பொய்கள் ஒருநாள் நிச்சயம் வெளிவந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

