சச்சினின் டெஸ்ட் ரன் சாதனையை நெருங்கும் ஜோ ரூட்.. 18 ஆண்டுகால சாம்ராஜ்யத்தை வீழ்த்துவாரா?
கிரிக்கெட் உலகின் கடவுள் எனப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், கடந்த 2008ஆம் ஆண்டு பிரையன் லாராவின் சாதனையைக் கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த சாதனையை நிகழ்த்தினார். சாதனை அரியணையில் ஏறி 18 ஆண்டுகள் கடந்துவிட்டன. 2013இல் அவர் ஓய்வு பெற்று 13 ஆண்டுகள் ஆகியும் யாராலும் அசைக்க முடியாத அந்த இமாலய சாதனையை, தற்போது இங்கிலாந்தின் ஜோ ரூட் மிக நெருங்கி உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் விளையாடி 15 ஆயிரத்து 921 ரன்களுடனும் 51 சதங்களுடனும் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் தொடர்ந்து கம்பீரமாக நீடிக்கிறார்.
மறுபுறம், 169 போட்டிகளில் ஆடியுள்ள ஜோ ரூட் 14 ஆயிரத்து 278 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். சச்சினின் இந்த வரலாற்று ரன் சாதனையை முறியடிக்க ரூட்டுக்கு இன்னும் வெறும் ஆயிரத்து 643 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. சதங்கள் பட்டியலில் சச்சின் 51 சதங்களுடன் ஆதிக்கம் செலுத்த, ரூட் 41 சதங்களுடன் பின்தொடர்கிறார். ஆனால், சில முக்கிய மைல்கற்களில் சச்சினையே ரூட் முந்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் அடித்த 68 அரைசதங்களை விஞ்சி, 69 அரைசதங்களுடன் புதிய சாதனை படைத்துள்ளார்.
மேலும் சர்வதேச அரங்கில் 23 ஆயிரம் ரன்களை சச்சின் 522 இன்னிங்ஸ்களில் எட்டிய நிலையில், ரூட் 521 இன்னிங்ஸ்களிலேயே கடந்து 2ஆவது அதிவேக வீரராக வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்துள்ளார்.18 ஆண்டுகளாக எந்தவொரு பேட்டராலும் எட்ட முடியாத சச்சினின் டெஸ்ட் ரன் கோட்டையை, ஜோ ரூட் தகர்த்து புதிய சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

