காலில் ஏற்பட்ட காயம்.. பயிற்சியின் போது வலியால் துடித்த ரிஷப் பண்ட்! அப்டேட் என்ன?
ஐசிசி மினி உலகக்கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடரானது வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 09ஆம் தேதிவரை நடக்கவிருக்கிறது.
8 அணிகள் பங்கேற்கும் தொடரில் முதல் தொடரில் இந்தியா வங்கதேசத்தை துபாயில் நடக்கும் போட்டியில் எதிர்கொள்கிறது.
2017 சாம்பியன்ஸ் டிராபி (ஃபைனல்) 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் (ஃபைனல்), 2022 டி20 உலகக்கோப்பை (செமி ஃபைனல்), 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் (ஃபைனல்), 2023 ஒருநாள் உலகக்கோப்பை (ஃபைனல்) என தொடர்ந்து ஐசிசி தொடர்களை நழுவவிட்ட இந்திய அணி, 2024 டி20 உலகக்கோப்பை வென்று கம்பேக் கொடுத்தது.
இந்த சூழலில் 2017-ம் ஆண்டு இழந்த சாம்பியன்ஸ் டிராபியை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் துபாய்க்கு பயணப்பட்டுள்ளது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுவான அணியாக இருக்கும் இந்தியா, துபாயில் பயிற்சி அமர்வில் ஈடுபட்டுவருகிறது.
ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்ட காயம்.. நிலை என்ன?
2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை எதிர்த்து விளையாடுகிறது. முதல் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக பிப்ரவரி 19-ம் தேதியன்று துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் விளையாடுகிறது இந்திய அணி.
துபாய்க்கு சென்றுள்ள இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்த சூழலில் பயிற்சி அமர்வில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்த போது, அவரடித்த பந்து வலைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த ரிஷப் பண்ட்டின் காலில் வேகமாக சென்று தாக்கியது. வலியால் துடித்த ரிஷப்பண்ட்டை மருத்துவக்குழு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றது.
ஹர்திக் பாண்டியாவும் உடனடியாக நெட் பயிற்சியை விட்டு வெளியேறி, ரிஷப் பண்ட்டின் அப்டேட்டை பார்க்க சென்றார். நடக்க முடியாமல் கஷ்டப்பட்ட ரிஷப் பண்ட், சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா என்ற குழப்பம் ஏற்பட்டது.
இந்த சூழலில் அவர் குறித்த அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், ரிஷப் பண்ட் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் அளவு நன்றாக இருப்பதாக ரெவ்ஸ்போர்ட்ஸ் அப்டேட் வெளியிட்டுள்ளது.