”கடந்த 3 வருடத்தில் நானே இப்படி ஆடியதில்லை..” - வெற்றிக்கு பின் பேசிய கோலி!
இந்திய அணியின் வெற்றிக்கு பின் விராட் கோலி தனது மனதில் இருந்ததை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். கடந்த 2-3 ஆண்டுகளில் இப்படி விளையாடாததாக கூறிய அவர், இந்த தொடரில் தனது ஆட்டம் மிகவும் திருப்திகரமாக இருந்ததாகவும், மிடில் ஓவர்களில் தனது பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியமானதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது.
முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என வென்ற தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவை அவர்களின் சொந்தமண்ணில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை வென்று சாதனை படைத்தது.
தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இரண்டு அணிகளின் தலா ஒரு வெற்றிக்கு பின் 1-1 என சமன்செய்யப்பட்டது. இந்தசூழலில் இரண்டு அணிகளும் மோதிய 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது..
வெற்றிக்கு பின் பேசிய விராட் கோலி..
விசாகப்பட்டினத்தில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, டிகாக்கின் அற்புதமான சதத்தின் உதவியால் 270 ரன்கள் குவித்தது..
தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 39.5 ஓவரிலேயே இலக்கை எட்டிப்பிடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.. பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி மூன்று பேரும் 116, 75 மற்றும் 65 ரன்கள் அடித்து அசத்தினர். ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 2 சதம் ஒரு அரைசதம் விளாசி 151 சராசரியுடன் 302 ரன்கள் குவித்த விராட் கோலி தொடர்நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்..
தன் திறமையை சந்தேகித்த நபர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் ஒரு ஆட்டத்தை ஆடிய கோலி, தன் மனதில் இருந்தவற்றை வெளிப்படையாக பேசினார். அப்போது பேசுகையில், “உண்மையைச் சொன்னால், இந்தத் தொடரில் நான் விளையாடிய விதம் எனக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது. என் மனதில் மிகவும் சுதந்திரமாக உணர்கிறேன். கடந்த 2-3 வருடங்களில் நான் இப்படி விளையாடியதில்லை. நான் மிடில் ஓவர்களில் இப்படி பேட்டிங் செய்வது இந்திய அணிக்கு பெரிய பங்களிப்பாக இருக்கிறது. நான் எனக்கே நிர்ணயித்த என்னுடைய தரத்திற்கு ஏற்ப விளையாடவே முயற்சிக்கிறேன்” என்று பேசியுள்ளார்.

