-4 புள்ளிகளுடன் கடைசி இடம்.. சிஎஸ்கே படுதோல்விக்கான 3 காரணங்கள் என்ன..?
ஐபிஎல் 19வது சீசனில் ராஜஸ்தானிடம் 47 பந்துகள் மீதமிருக்க வென்றதால், -4.171 நெட் ரன் ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் கடைசியில் தள்ளப்பட்ட சிஎஸ்கே, வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. அணித் தேர்வில் தவறுகள், உர்வில் பட்டேல்-அகீல் ஹொசைன் போன்ற ஃபார்மில் உள்ள வீரர்களை புறக்கணித்தது, மேத்யூ ஷார்ட்டை தவறான வேடத்தில் பயன்படுத்தியது தோல்விக்குக் காரணமாகியது.
ஐபிஎல் தொடரின் 19வது சீசன், பரபரப்பாக தொடங்கி நடந்துவருகிறது. முதலிரண்டு போட்டியில் பங்காளிகள் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெற்றுவிட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3வது போட்டியில் வெல்லும் என்ற எதிர்ப்பார்ப்பில் சிஎஸ்கே ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் வெறும் 127 ரன்களை மட்டுமே அடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தானிடம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
47 பந்துகளை வெளியில் வைத்து வெற்றிபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி +4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் பிடித்தது. அதேநேரம் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய தோல்வியை சந்தித்த (அதிகபட்ச தோல்வி வித்தியாசம் 59 பந்துகள்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி -4. 171 புள்ளிகளுடன் 10வது இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் சென்னை அணியின் படுதோல்விக்கான 3 முக்கிய காரணங்களை இங்கே பார்க்கலாம்..
CSK தோல்விக்கான 3 காரணங்கள்..
அணித் தேர்வில் சொதப்பல்
2025 ஐபிஎல் தொடரிலேயே சென்னை அணியின் பெரிய தலைவலியாக அமைந்தது அணித்தேர்வு தான். எந்த வீரர்களை தேர்வுசெய்ய வேண்டும், எந்த வீரர்களை எங்கே களமிறக்க வேண்டும் என்ற கேள்விக்கான விடை கடைசிவரை கிடைக்கவேயில்லை.
இந்தப் போட்டியில் பிரேவிஸ், தோனி இருவரும் இல்லையென்றாலும் சிறந்த ஃபார்மில் இருக்கும் உர்வில் பட்டேல், அகீல் ஹொசைன் இருவரையும் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் உர்வில் பட்டேலுக்கு பதிலாக மேத்யூ ஷார்ட்டை விளையாடியது தவறாக முடிந்தது. ஒருவேளை மேத்யூ ஷார்ட்டுக்கு பதிலாக அகீல் ஹொசைன் விளையாடியிருந்தால் அவர்களால் 160-70 ரன்களை கூட அடித்திருக்க முடியும்.
வீரர்கள் வரிசையில் குழப்பம்
அணித்தேர்வை கடந்து இருக்கின்ற வீரர்களை சரியான இடத்தில் களமிறக்காததும் சிஎஸ்கே அணியின் மோசமான தோல்விக்கு காரணமாக அமைந்தது. சென்னை அணிக்கு தொடக்க வீரராக சிறப்பாக விளையாடிவந்த ஆயுஸ் மாத்ரே 3வது வீரராக களமிறக்கப்பட்டதும், விக்கெட்டுகள் சரிந்தபோது சிறந்த ஃபார்மில் இருக்கும் ஷிவம் துபேவை இறக்காமல் போனதும் பெரிய தவறுகளாக அமைந்தது. டாப் ஆர்டர்கள் 3 பேரும் அவுட்டான போதே ஷிவம் துபேவை பேட்டிங்கிற்கு அனுப்பியிருக்க வேண்டும்.
மூத்த வீரர்கள் பொறுப்பில்லாத ஆட்டம்
சஞ்சு சாம்சன் முதலில் அவுட்டாகி வெளியேறிய பிறகு ஆயுஸ் மாத்ரேவை அதிரடியாக ஆடச்சொல்லிவிட்டு ருதுராஜ் நிதானமாக ஆடியிருக்க வேண்டும். ஆனால் அவரும் அவசரப்பட்டு அடிக்க முயன்று விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். மறுபுறம் நல்ல தொடக்கம் கிடைத்தபிறகும் சர்பராஸ் கானும் அதே தவறை தான் செய்தார். ஷிவம் துபேவும் அதே தவறைத்தான் மீண்டும் செய்தார். அதற்கும் மேல் ஃபீல்டிங், பவுலிங் என அனைத்திலும் சிஎஸ்கே அணி பின்தங்கியே உள்ளது. சென்னை அணிக்கு பேட்டிங் தான் பலம் என சொல்லப்படும் நிலையில், அவர்களுடைய பேட்டிங் சொதப்பும் போது அது பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே எதிரொலிக்கிறது.

