சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ்
சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ்web

2026-லும் 10வது இடம் தானா..? சிஎஸ்கே மோசமான தோல்வி! 15 பந்தில் முடித்துவிட்ட சூர்யவன்ஷி!

2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக படுமோசமான தோல்வியை பதிவுசெய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..
Published on
Summary

2026 ஐபிஎல் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான தோல்வி கண்டது. முழு அணியையும் கலைத்து புதிய வீரர்களை சேர்த்தும், சிஎஸ்கே 127 ரன்களுக்கு சுருண்டது. ராஜஸ்தான் அணியின் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி 15 பந்தில் அரைசதம் அடித்து, 13வது ஓவரிலேயே இலக்கை எட்டச் செய்தார். தவறான பிளேயிங் காம்பினேஷன் மீண்டும் கேள்வி எழுப்புகிறது.

2023 ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் 5வது ஐபிஎல் கோப்பை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அப்போதே தோனி ஓய்வுபெற்றுவிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அணியின் எதிர்காலத்தை காரணம் காட்டி ரசிகர்களுக்கு தொடர்ந்து விளையாட முடிவுசெய்தார் மகேந்திர சிங் தோனி. ஆனால் 2024 ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக அறிவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

CSK IPL 2023 Finals
CSK IPL 2023 FinalsKunal Patil

2024 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் தலைமையில் பிளே ஆஃப் செல்ல போராடிய சென்னை அணி 5வது இடத்தில் முடித்தது. பின்னர் 2025 ஐபிஎல் ஏலத்தில் திரிபாத்தி, தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, சாம் கரன் என பல ஸ்டார் வீரர்கள் இருந்தபோதும் 10வது இடத்திலேயே முடித்தது சென்னை அணி.

பின்னர் 2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக மொத்த அணியையும் கலைத்த சென்னை அணி, டெவால்ட் பிரேவிஸ், ஆயுஸ் மாத்ரே, உர்வில் பட்டேல், சஞ்சு சாம்சன், கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர் என பல திறமையான வீரர்களை உள்ளே எடுத்துவந்தது. அந்தவகையில் 2026 ஐபிஎல் தொடரில் சென்னை அணி சிறந்த அணியாக உருவெடுக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்துவருகிறது.

sanju samson
sanju samsonweb

இந்நிலையில் தான் 2026 ஐபிஎல் முதல் போட்டியிலேயே மோசமான தோல்வியை சந்தித்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ’இவங்க இன்னும் திருந்தல மாமா’ கோணத்திலேயே செயல்பட்டுள்ளது ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ்
CSK vs RR| முக்கிய வீரருக்கு வாய்ப்பு இல்லை.. ரசிகர்கள் ஏமாற்றம்! சிஎஸ்கே முதலில் பேட்டிங்!

சிஎஸ்கே படுதோல்வி..

குவஹாத்தியில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். இரண்டு பேருமே சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6, 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 3வது வீரராக களமிறங்கிய ஆயுஸ் மாத்ரே 0 ரன்னிலும், 4வது வீரராக களமிறங்கிய மேத்யூ ஷார்ட் 2 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.

ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட்

இம்பேக்ட் வீரராக களமிறங்கிய சர்பராஸ் கான் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசினாலும் 17 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து கார்த்திக் சர்மா 18, ஷிவம் துபே 6 என வெளியேற, கடைசிவரை போராடிய ஓவர்டன் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 43 ரன்கள் சேர்த்தார். 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சிஎஸ்கே 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

128 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய 15 வயது வைபவ் சூர்யவன்ஷி 5 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டி 15 பந்தில் அரைசதமடித்து மிரட்டினார். வைபவ் 52 ரன்கள், 37 ரன்கள் என அடிக்க 13வது ஓவரிலேயே இலக்கை எட்டிய ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.

சூர்யவன்ஷி
சூர்யவன்ஷி

மிகப்பெரிய தோல்வியை சந்தித்த சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. 2026 ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் அணிக்கு வந்தது அணியை முன்னேற்றும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், டெவால்ட் பிரேவிஸ் ஒருவர் இல்லாதது அணியை மொத்தமாக பாதித்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் அணியின் காம்பினேசனில் சொதப்பிய சிஎஸ்கே, இன்றைய போட்டியிலும் சொதப்பியது. சிறந்த ஃபார்மில் இருக்கும் உர்வில் பட்டேலை பயன்படுத்தாமல் மேத்யூ ஷார்ட்டை பயன்படுத்தியது ஏன் என்பது புரியவில்லை..

மற்ற அணிகள் எல்லாம் 200 ரன்கள் என சென்று கொண்டிருக்கும் வேளையில், சிஎஸ்கே விரைவில் அவர்களுடைய சிறந்த பிளேயிங் காம்பினேஷனை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ்
IPL 2026| முதல் போட்டியிலேயே கோப்பைக்காக ஆடிய ஆர்சிபி.. வெற்றிக்கு பின் கோலி பேசியது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com