T20 WC| சூப்பர் 8 சுற்றுக்கு வெஸ்ட் இண்டீஸ் தகுதி.. வெளியேறிய நேபாள், ஓமன்!
2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது. நேபாள அணியை எதிர்த்து 134 ரன்கள் இலக்கை எட்டிய வெஸ்ட் இண்டீஸ், 15.2 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து வெற்றி பெற்றது. ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் 10ஆவது சீசன், கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வரும் நிலையில், 3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது. மேலும் ஓமன் அணி முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறியது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்ற வெஸ்ட் இண்டீஸ்..
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நேபாள் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜேசன் ஹோல்டரின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாத நேபாள் 20 ஓவரில் 133 ரன்கள் மட்டுமே அடித்தது. சிறப்பாக பந்துவீசிய ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
134 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 15.2 ஓவரில் இலக்கை எட்டி பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது. கேப்டன் ஷாய் ஹோப் 61 ரன்களும், ஹெட்மயர் 46 ரன்களும் அடித்து அசத்தினர்.
இந்தப்போட்டியின் வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து இரண்டாவது அணியாக வெஸ்ட் இண்டீஸ் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது. அதேபோல நேபாள அணி ஓமனை தொடர்ந்து இரண்டாவது அணியாக உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

