கொய்யாப் பழம் கொண்டு பந்துவீச்சு பயிற்சி! முதல் போட்டியிலேயே வரலாறு படைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அறிமுக போட்டியிலேயே அனைவரின் கவனத்தையும் திருப்பியிருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் ஷமர் ஜோசஃப்.
shamar joseph
shamar josephAus Cricket

ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் 17-ம் தேதி தொடங்கியது. பெரும் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 188 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 283 ரன்கள் எடுத்தது. 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் வெறும் 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா விக்கெட்டே இழக்காமல் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் பல வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். தன் வழக்கமான பாணியில் ஆடிய டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸில் 119 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார். வேகப்பந்துவீச்சாளர் ஜாஷ் ஹேசில்வுட் இரு இன்னிங்ஸிலுமே தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கிர்க் மெக்கென்சி முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்ததோடு தன்னுடைய அட்டகாசமான ஷாட்களால் பலரின் கவனத்தையும் திருப்பினார். இருந்தாலும், இந்தப் போட்டி முழுவதும் அதிகமாகப் பேசப்பட்ட வீரர் ஷமர் ஜோசப் தான். அறிமுக போட்டியிலேயே அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார் இவர்.

18 மாதங்கள் முன்புவரை வேறுவேலை!

24 வயதான ஷமர் ஜோசஃப் அறிமுகம் ஆகும்போதே பலரும் அவரைப் பற்றிப் பெருமையாகக் கூறியிருந்தனர். 18 மாதங்கள் முன்பு வரை வேலை செய்துகொண்டே கிரிக்கெட் விளையாடினார் அவர். பலரும் அவருக்கு நம்பிக்கை கொடுக்க, முழு நேரமாக விளையாட்டைக் கையில் எடுத்தார். குறுகிய காலத்தில் பலரின் கவனத்தையும் பெற்று தேசிய அணிக்குத் தேர்வானார். அதனால் முதலில் இருந்தே அவர்மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அவரது பந்துவீச்சைப் பார்க்க எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் அதற்கு முன்பே அவருடைய பேட்டிங்கைப் பார்க்கவேண்டியதாக இருந்தது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்திருந்தது. 11வது வீரராகக் களமிறங்கிய ஷமர் ஜோசஃப், கீமர் ரோச் உடன் ஜோடி சேர்ந்து அசத்தினார். முன்னணி பந்துவீச்சாளர்களையும் அசராமல் அடித்து ஆடினார். 3 ஃபோர்கள், 1 சிக்ஸர் என 41 பந்துகளில் 36 ரன்கள் விளாசினார் அவர். இறுதியாக லயானின் சுழலில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார் அவர்.

அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரில் முதல் முறையாக தன் சர்வதேச கிரிக்கெட் ஓவரைப் பந்துவீச வந்தார் ஷமர் ஜோசஃப். அவர் வீசவேண்டிய முதல் பந்தை எதிர்கொள்ளத் தயாராக இருந்தார் ஸ்டீவ் ஸ்மித்.

சமகால கிரிக்கெட்டின் மிகச் சிறந்த டெஸ்ட் வீரரை எதிர்கொள்ள ஜோசஃப் இன்னுமே தயாராகத்தான் இருந்தார். அட்டகாசமாக அவர் வீசிய அந்தப் பந்தில் இருந்த பௌன்ஸ் ஸ்டீவ் ஸ்மித்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் அதிலிருந்து விலகமுடியாமல் அடித்து விட, பந்து எட்ஜாகி மூன்றாவது ஸ்லிப்பில் இருந்த கிரீவ்ஸின் கையில் விழுந்தது. தன் முதல் சர்வதேச பந்திலேயே விக்கெட் வீழ்த்தி மாபெரும் ஆச்சர்யத்தைக் கொடுத்தார் ஷமர் ஜோசஃப்.

சிறப்பாகப் பந்துவீசி ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் நெருக்கடி கொடுத்தார் ஜோசஃப். அதன் பலனாக அவருக்கு தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்ந்தன. மார்னஸ் லாபுஷான், கெமரூன் கிரீன் ஆகியோரையும் வெளியேற்றி ஆஸ்திரேலிய நடுகளத்துக்கு ஆட்டம் காட்டினார் அவர். இறுதியில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயான் ஆகியோரையும் அவுட்டாக்கினார் அவர். தன் முதல் இன்னிங்ஸிலேயே 5 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பிடித்தார் அவர்.

17 ஆண்டுகளில் முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

கடந்த 17 ஆண்டுகளில் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட்களை பதிவு செய்த முதல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்தார் ஷமர் ஜோசஃப்.

shamar joseph
shamar joseph

ஒரு மிகச் சிறிய கிராமத்தில் கொய்யாப் பழங்கள் கொண்டு பந்துவீசிப் பழகி, 18 மாதங்கள் முன்பு வரை முழு நேர கிரிக்கெட்டில் ஈடுபடாமல் இருந்த ஒரு வீரர், அடிலெய்ட் மைதானத்தில் உலகின் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன் அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார் இந்த இளம் பௌலர். தொடர்ந்து சரிவுகளையும் விமர்சனங்களையுமே சந்தித்து வந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு ஒரு மாற்றமாக, மாபெரும் பாசிட்டிவாக அமைந்திருக்கிறார் இவர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com